Published On: Friday, September 09, 2011
US open Tennis மழையால் பாதிப்பு

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர், இரண்டாவது நாளாக மழையால் பாதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. கடந்த செவ்வாய் அன்று நடக்க இருந்த ஒன்பதாவது நாள் ஆட்டம், கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த பத்தாவது நாள் ஆட்டம், மழை காரணமாக தாமதமாக துவங்கியது.
மீண்டும் மழை: ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் "நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் ரபெல் நடால், லக்சம்பர்க்கின் கில்லஸ் முல்லரை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டில், முல்லர் 3-0 என முன்னிலை வகித்திருந்த போது மீண்டும் மழை பெய்தது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது.
இதேபோல டேவிட் பெரர் (ஸ்பெயின்) - ஆன்டி ரோடிக் (அமெரிக்கா), டொனால்டு யங் (அமெரிக்கா) - ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகியோர் மோதிய நான்காவது சுற்றுப் போட்டிகளும் நிறுத்தப்பட்டன.
வீரர்கள் புகார்: பின் லேசாக மழை விட்டதும், வீரர்களை மைதானத்திற்குள் விளையாடச் செல்லுமாறு, தொடரை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து நடால், முர்ரே, ரோடிக் உள்ளிட்ட முன்னணி வீரர்கள், "ரெப்ரி' பிரையன் ஏர்லியிடம் புகார் தெரிவித்தனர்.
முன்னணி வீரர்களின் கருத்து: நடால்: தொடரை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் எங்களை அழைத்த போது, லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. ஆடுகளமும், விளையாடும் தகுதியில் இல்லை. மைதானத்தில் ரசிகர்கள் இருந்தபோதிலும், உடற்தகுதி முக்கியம் என்பதால், நாங்கள் விளையாடச் செல்லவில்லை. எங்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை. கிராண்ட்ஸ்லாம் தொடரில் நிறைய லாபம் கிடைக்கும். தொடரை நடத்துபவர்கள் பணத்தை மட்டுமே பார்க்கின்றனர். வீரர்கள் குறித்த கவலை இருப்பதாக தெரியவில்லை.
ஆன்டி முர்ரே: நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாட தயாராக இருக்கிறோம். அதேவேளையில் வீரர்களின் உடல் மற்றும் உயிர் பாதுகாப்பு முக்கியம்.
டோகோவிச்: இது கிராண்ட் ஸ்லாம் தொடர் என்பதால் நிறைய செலவு ஏற்படும். இதேபோல நிறைய வருமானமும் கிடைக்கும். எனவே வரும் காலங்களில் மழை போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்க, மைதானத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும்.