Published On: Saturday, October 22, 2011
தாய் இறந்ததால் மகளும் தற்கொலை

இந்தியாவின் நாகர்கோவில் அருகில் தாய் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாத கல்லூரி மாணவி ஒருவர், தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில் அருகிலுள்ள இறச்சக்குளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி விஜயராணி. இவர்களுக்கு பிரதீஸ் என்ற மகனும், பிரேமி என்ற மகளும் உண்டு. பிரதீஸ் தக்கலை அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். பிரேமி நாக்ர்கோவில் அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
விஜயராணி தனது கணவரை பிரிந்து மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்தார். விஜயராணி உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். காலையில் பிரதீஸ் வெளியே சென்றுவிட்டார். வெகுநேரமாகியும் விஜயராணியும், பிரேமியும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.
வீட்டுக்குள் விஜயராணி இறந்து கிடந்தார். பிரேமி வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது குறித்து உடனடியாக பூதப்பாண்டி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரேமியை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகி்ச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதலில் தாய், மகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பொலிஸார் நடத்திய விசாரணையில் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு விஜயராணி இறந்திருக்கிறார். நேற்று காலையில் பிரேமி தனது தாயை எழுப்பியிருக்கிறார். அப்போது தான் அவர் இறந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் அவர் வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் இறச்சிக்குளம் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.