Published On: Saturday, October 22, 2011
சிறுவர்மீது கரிசணை காட்டப்படுகின்றதா?

பொதுவாக சிறுவர்கள், பெரியவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் வளர்க்கப்படுகின்றார்கள். பெற்றோர்களின் அன்பான அரவணைப்பும் குடும்பத்தவர்களினது பண்புமிக்கப் பரிவுடன் கூடிய செல்லப்பிள்ளையாக வீட்டிலும் அதன் சுற்றாடலிலும் உலாவிடும் போது, குழந்தைப்பருவத்தில் தாயின் ஸ்பரிச வாய்வழி இன்பத்தை நுகர்ந்து அவளின் தாலாட்டில் கண்ணயர்ந்து, தாய்மொழியைப் பெற்று மழலை மொழியில் அம்மொழியறிவை வெளிப்படுத்தி அதன்பின்னர் பிள்ளைப்பருவத்தில் தொடுகை, ஆராய்வின் மூலமாக தன்செயற்பாட்டை ஆரம்பித்து கருத்துக்களை செவிமடுக்கும் பருவமான ஆறுவயதில் பாடசாலையும் செல்கின்ற ஒரு வழிமுறையில் சிறுவர்கள் கற்கத் தொடங்குவர். இவர்களின் கடந்த ஆறுவயதில் அறிந்திடாத பல்வேறு புதினங்களை பாடசாலை வாழ்வில் கற்று அறிந்திடவும், ஒழுகவும் பின்பற்றத் தொடங்குகின்றனர்.
இதன்பின்னர் வருகின்ற காலப்பகுதியில் பல்வேறு வகைப்பட்ட இம்சைகளுக்கும், மனஉளைச்சல்களுக்கும் ஆளாகி உளரீதியான பக்குவத்தை சீர்குலைப்பதில் குறியாய் இருக்கின்ற பல பச்சோந்திப் புத்தியுடைய சில பெரியவர்கள் இவர்களது வாழ்வில் குறுகிடுகின்றபோதுதான் பாதுகாப்பும், தங்களுக்குள்ள உரிமைகளையும் பற்றிய சுமாரான அறிவினை பெறுகின்றனர். அவ்வாறு பெற்றிருந்தாலும் தனக்கு உதவுகின்ற தோரணையில் வீட்டில் பெற்றோரும், பாடசாலையில் ஆசிரியரும் செயற்படுகின்றனர். சில வேளைகளில் வேலியே பயிரை மேய்ந்த கதைபோல வீட்டில் வசிக்கின்ற முதியவர்களும், பாடசாலையில் சில ஆசிரியர்களும், பிரதேசத்தில் காணப்படுகின்ற வயதில் மூத்தோர்களும் இவர்களது வழியில் விழிவைத்து பாதையை மாற்றுகின்றனர். அல்லது மாற்ற முயல்கின்றனர். அங்கே பாதிக்கப்படுகின்ற அல்லது பாதிக்கப்படுவதாக நினைக்கும் இப்பிள்ளைகளின் வாழ்வில் ஏற்படுகின்ற மனவெழுச்சிகளையும், உடல், உளரீதியான மாற்றங்களையும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அறிந்து உரியவேளையில் நடவடிக்கை எடுக்கின்றபோது அது அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அமைந்துவிடும்.
சிறுவர்கள் என்போர் 18 வயதிற்குட்பட்ட அனைத்துப்பிள்ளைகளும் சிறுவர்கள் எனும் வரையறைக்குள் வருகின்றார்கள் என்பதை சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சமவாயத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய நாளில் கொண்டாடப்படுகின்ற சர்வதேச தினத்தில் சிறார்கள் மீதான பாதுகாப்பினை சமுதாயத்தில் உள்ள பெரியவர்கள் மதிக்கின்ற தன்மை, அவர்களது உரிமைகள் எந்தளவுக்கு பேணப்படுகின்றது என்பதைப் பற்றி இத்தருணத்தில் பார்ப்பது சமுதாயக் கடமையாகும்.
இன்றைய நாட்களில் இதன் கண்ணோட்டத்தைப் பார்க்கின்றபோது நமது நாட்டில் அடிக்கடி சிறுவர்கள் மீதான பற்றுக்கள் காற்றாய் பறக்கின்ற பல சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று வருவதைக் காணலாம். உதாரணமாக பாலகப் பிஞ்சுக் குழந்தையை வீதியில் அல்லது குப்பைத்தொட்டியில் போடுகின்ற சம்பங்கள் தொடக்கம் குழந்தைகளை ஆற்றினுள், கிணற்றினுள் போட்டு கொலை செய்கின்ற அளவுக்கு சிறுவர்கள் மீதான பற்று குறைவடைந்து வருகின்றதா? எனும் கேள்வியை நாமே கேட்கவேண்டிய ஒரு சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமே என்பதை எண்ணுகின்றபோது மனம் வேதனைப்படுகின்றது. அதுமட்டுமா என்ன? சிறுவர்களைக் கடத்தி பணம் பறிப்பது, அவர்களை மிரட்டுவது, பிள்ளைகளின் உடல் உறுப்புக்களை (கண், சிறுநீரகங்கள்) களவாடுதல், பாலியல் துர்நடத்தைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களுக்கு இலகுவாக ஆட்படுகின்ற ஒரு நிலையில் இவர்களின் பாதுகாப்பு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் உண்டு என்பதையும் கவனத்திற்கொள்ளல் அவசியமானதாகும்!
சுற்றுப்புறச்சூழலில் சமுதாயத்தினது சில இறுக்கமான கட்டமைப்புக்கள் காரணமாக பிள்ளைக்கு உளரீதியான நெருக்குதல்கள் அதிகளவு ஏற்பட்டுள்ளதை அறிந்தும் அறியாததுபோல் நடந்து கொண்டிருக்கின்றோம். சிறுவர்களை பாதுகாப்பது பெற்றோர், ஆசிரியர், சமுதாயத்தலைவர்கள், பெரியவர்கள் போன்ற அனைவருடையதும் பொறுப்பாகும். ஏனெனில் ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதன்படி பிள்ளைகளுடைய எல்லாவகையான அதிசிறந்த நலன்களிலும் ஒவ்வொரு மனிதருக்கும் கடப்பாடுள்ளது என்பதை நாம் மறந்து விடுகின்றோம்.
ஆதலால் தான் சர்வதேச நிறுவனமான யுனிசெப் அமைப்பின் கடந்தகால அறிக்கையொன்றின்படி சுமார் ஒன்பது மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் குறைந்தவயதில் இறப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள் எனவும், சுமார் இருநூறு மில்லியன் சிறார்கள் இரண்டாம் நிலைக்கல்வியைத் தொடர முடியாத நிலையிலும், வருடந்தோறும் சுமார் 1.5 பில்லியனுக்கும் மேற்பட்ட சிறார்கள் வன்முறைக் கலாசாரத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு வயது தொடக்கம் பதினான்கு வயதுவரையிலான பிள்ளைகளில் 85 சதவீதமானோர் ஏதோர் வகையில் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உலகில் சுமார் 150மில்லியன் சிறுவர்கள் பெரியோர்களாலும், பெற்றோர்களாலும், ஏனைய வீட்டுக் காரணிகளாலும் உடல் உழைப்பைநாடி பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்ற அதேவேளை ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட சிறார்கள் உள்நாடுகளில் ஏற்படுகின்ற. ஏற்பட்ட யுத்தம் மற்றும் பயங்கரவாதங்களில் சிக்குண்டு காணப்படுகின்றார்கள் எனவும் கூறுகின்றது.
எது எவ்வாறாயினும் இன்றைய யதார்த்த உலகின் போக்குகளை உணர்ந்து பெரியவர்கள் சிறார்களின் உரிமைகளைப் பற்றிய விழிப்புக்களை அறிந்து கொள்தல் அவசியமாகும். தெருவோரங்களில் சிறுவர்கள் உரிமைகளைப் பாதுகாப்போம். அவர்கள் மீதான துஷ்பிரயோகங்களை உடன் அறிவிக்கும் தொலைபேசி (1929) இலக்கங்கள் மற்றும் யார் யாரிடம் கூறவேண்டும் என்கிற வாசகங்களும் பல வர்ணங்களில் பெரிய பெரிய பதாகைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அது வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் சிறுவர்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்ற அவலநிலையினை பெரியவர்கள் காண்கின்றனர். கடற்கரையில், வயலில், வியாபார நிலையங்கள் போன்ற பல்வேறுபட்ட கோணங்களில் சிறுவர்களின் மீதான அழுத்தங்கள் நடைபெற்;றே வருகின்றமையும் கண்கூடு.
பாடசாலைகளில் சிறுவர்கள் கல்வி பயில்கின்றார்கள். அங்கே கற்றல் நடவடிக்கை சீரான முறையில் நடைபெறுகிறது. ஆனால் சிறார்களின் உரிமைகளைப் பற்றிய சரியான தெளிவின்மை காரணமாக ஆசிரியர் மாணவர்கள் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆதலால் அனைத்துப் பகுதியினரும் பிள்ளைகளின் உரிமைகள் பற்றிய தகவல்களை அறிந்து அவர்கள் மீதான அழுத்தங்களை இல்லாமலாக்கி பெரியர்கள் அனைவரும் ஏதோர்வடிவில் உதவுகின்ற மனப்பக்குவத்தை பெற்றிட சிறுவர்களுக்கான சர்வதேச தினத்திலிருந்து அறைகூவல்விடுகின்ற நற்செய்தியை என்றும் நிலைத்தோங்கிட செய்தல் அவசியமாகும். அதேவேளை வீதிகளில் கல்வியின்றி சுற்றித்திரிகின்ற பிள்ளைகளின் கல்வி பெறுகின்ற உரிமைகளையும் அறிந்து அவர்களையும் பாடசாலையுடன் இணைப்பதும் பெரியோர்களினதும், கற்றோரினதும் கடமையாகக் கொண்டு செயற்படுகின்றபோது அது எதிர்காலத்தில் நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் பலனளிக்கும் செயலாக கருதலாம் அல்லவா.
இன்று சிறார்களுக்கான துஷ்பிரயோகங்கள் பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. அதிலொன்றுதான் இன்றைய 'பேஸ்புக்' சமாச்சாரமாகும். இணையத்தில் உலாவருகின்றோம் என்ற போர்வையில் மாணவர் சமுதாயம் பேஸ்புக்கின் ஊடாக சீரழிவுக்குள்ளாகின்ற நிலைமை காணப்படுகிறது. அண்மையில்கூட பேஸ்புக் தளங்கள் சிலரால் பிழையான முறையில் துஷ்பிரயோகப்படுத்துவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அறியவந்துள்ளது. இது மட்டுமா? சிறுவர்களுக்கான பாதுகாப்பு இல்லங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. அதில் இருகின்ற சிறுவர்களை பாலியல் பலாத்காரத்திற்கு பயன்படுத்தி அவர்களின் வாழ்வில் ஒழுக்கச் சீரின்மையை ஏற்படுத்தி இளம்வயதில் மொட்டவிழ்ந்த கட்டைகளாக மாற்றுகின்ற கைங்கரியத்தில் ஈடுபடுகின்றவர்களையும் இனங்கண்டு சரியான தண்டனைகள் வழங்குவது அவசியமாகும். அந்தவகையில் இலங்கை சிறுவர் அதிகார சபை முன்வைத்துள்ள யோசனையின் படி சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மரணதண்டனை வழங்கும்படி சட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இது உண்மையில் சிறார்கள் மீது குற்றம் இழைப்போருக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையே சமுதாய ஆர்வலர்களின் கருத்தாக காணப்படுகிறது. அண்மைக்காலங்களில் அண்மையில் மத போதகர்கள்கூட சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுவர்கள் மீதான பரிவுணர்வுடன் சட்டங்கள்பல கடந்தகாலங்களில் இருந்து வந்தாலும் சிறுவர்கள் மீதான உரிமைகள் ஐக்கியநாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் அதனை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசின் சிறுவர் பட்டயம் விளங்குகின்றது. 1989ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்றின் பிரகாரம் 'நன்நடத்தை மற்றும் சிறுவர் பாராமரிப்பு திணைக்களமானது சிறுவர்களினது நலனுக்கும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளுக்கும் பொறுப்பு வாய்ந்ததொரு அதிகார சபையாக உருவாக்கப்பட்டு நாட்டின் தேசிய கொள்கைகளுக்கு உதவிடும் வகையில் சிறுவர் வன்முறைகளுக்கு எதிராகவும் சிறுவர்கள் தொடர்பாக சேவையாற்றுகின்ற ஒரு அமைப்பாகவும் பரவலாக்கப்பட்டவாறு நாட்டின் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்திடும் நிலையில் காணப்படுகிறது. இதன் நோக்கில் சிறுவர்களின் பாதுகாப்பு, சிறுவர்களின் மீதான அடக்குமுறைகளை கண்காணிக்கவும் வேண்டி 'கிராம மட்டத்திலான சிறுவர் உரிமைகள் பாதுகாப்பினை கண்காணிக்கும் குழுக்கள் சில பிரதேசங்களில் இயங்கிவருகின்றன. சில செயலற்றுப் போயுள்ள நிலையில் பிரதேச செயலகங்கள் தோறும் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளை நியமனம் செய்து பிரதேசத்திலுள்ள சிறார்கள் மீது ஏற்படுகின்ற உரிமை மீறல்களை கண்டு கொள்ள மேற்போன்ற குழுக்களின் பங்களிப்புக்களும் கிராம மட்டத்திலும், பாடசாலை மட்டத்திலும் அமைக்கப்படல் வேண்டும். அப்போதுதான் எதிர்கால நன்நடத்தை கொண்ட சிறுவர் பரம்பரை ஒன்றை உருவாக்கி நாட்டின் ஒழுக்க வீரியமுள்ள நற்பண்புகள் நிறைந்த மக்களை பெறுவதற்கு கால்கோளாய் அமையும்.
இலங்கை அரசியலில் சிறுவர்கள் மீதான பல்வேறு சட்டங்களும் அவர்கள் மீதான பரிந்துரைகளும் காலத்திற்குக் காலம் உருவாக்கப்பட்டு வந்துள்ளன. அந்தநிலையில் 1978இன் அரசியல் யாப்பிலும் சிறுவர்களுக்கு ஆதரவான சட்டங்கள் பல இயற்றப்பட்டு வந்தாலும் பிள்ளைகளின் மீதான குற்றச் செயல்களும், துஷ்பிரயோகங்களும், அடாவடிகளும் குறைந்தபாடில்லை. அண்மையில் பத்திரிகை ஒன்றில் வெளியாகிய செய்தியொறின்படி அம்பாறை மாவட்டத்தில் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக குறித்த உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார். குறிப்பாக கிராமப்புறங்களில் காணப்படுகின்ற வறுமை, வேலைவாய்ப்பின்மை, அதிக குடும்ப உறுப்பினர்கள், தாய், தந்தை அல்லது இருவரும் வெளிநாடு சென்றுள்ளமை, சீசன் காலங்களில் ஏற்படுகின்ற பிரதேசத்துச் தொழில்கள் போன்றனவும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு அதிக பங்களிப்பு செய்கின்ற காரணிகளாக அமைகின்றன.
அதுமட்டுமல்லாது சமுதாய வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்ற ஒரு போக்கும் இன்று காணப்படுகின்றது. அதாவது சிறுவர்கள் அடிக்கடி வீட்டில் அல்லது பாடசாலையில் பல்வேறுவிதமான வன்முறைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தகளுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை வீட்டு வன்முறை, சரீர தண்டனை அல்லது ஊடகங்கள் மூலமானவை போன்ற பல்வேறு வடிவங்களில் ஏற்படுத்தப்படுகின்றது. இதுவும் நமது சமுதாயத்தில் காணப்படுகின்ற ஒருவகை சமுதாய வன்முறை என்றே கருதப்படுகின்றது. உலக நாடுகளைப் போன்று 'இலங்கையும் சிறுவர்கள் மீதான எல்லா உடல், உள வன்முறைகளிலிருந்தும் பாதுகாப்பதற்கு சிறுவர்களுக்குள்ள சமவுரிமையை ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் சாசனத்தை அங்கீகரித்ததன் மூலம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் பிரகாரம் பார்க்கிறபோது 'சிறுவர்கள் கௌரவத்திற்கும், உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ளதற்கும் ஏற்றதாக பாடசாலை ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை நிச்சயப்படுத்த சகல நடவடிக்கைகளையும் இவ்வுடன்படிக்கையின் பங்காளிநாடுகள் அனைத்தும் எடுக்கவேண்டும்' சரத்து 28 (2) தெளிவுபடுத்துகின்றது.
பாடசாலையிலும்சரி, வீடுகளிலும்சரி சரீரதண்டனைகளை வழங்குவதன் மூலம் ஒரு பிள்ளை வேதனை, அவமானம், பதகளிப்பு, ஆத்திரம், வஞ்சகம் தீர்க்கும் எண்ணம் போன்றவை ஏற்படுகிறது. இவை அச்சிறுவர்களிடத்தில் நிரந்தரமாக குடிகொண்டு நீண்டகால உளவியல் தாக்கத்திற்கு இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகமில்லை. பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்ற உடல்ரீதியான துண்புறுத்தல்கள் பிள்ளை வளர்ந்த பின்னர் வன்முறையான, சமூக விரோத நடத்தைகளை உள்வாங்கியவனாக காணப்படுவான். இவர்கள் தமது வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகள் மீது வன்மையான குரோதத்தை பிரயோகிக்க முயல்வர். அத்துடன் போதைப் பொருளுக்கு அடிமையாகி அதிகரித்த துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாகி இறுதியில் இளம்வயதில் தற்கொலை அல்லது சுகயீனமுற்று மரணிக்க நேரிடும் நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றான். எனவேதான் சிறுவர்கள் மீதான எத்தகைய அழுத்தங்களும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால்தான் சிறுவர்கள் மீதான உரிமைகளை யாவரும் அறிந்து கொள்வது உசிதமாகும்.
சிறுவர்கள் மீதான உரிமைகளைப் பற்றி பார்ப்போமானால் 54பிரிவுகள் உள்ளடக்கப்படுகின்றன. அதில் முக்கியமாக 42 விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் பெரியோர்கள் சிறார்களை அணுகுதல் அவசியமாகும். அவற்றை சுருக்கமாக பார்ப்போமானால், பிள்ளை பற்றிய வரையறை, பாகுபாடு காட்டாமை, பிள்ளைகளின் சிறந்த நலன், சமவாயத்தை அமுலாக்குதல், பெற்றோரின் வளர்ச்சியும் பிள்ளைகளின் வளர்ச்சியும், உய்வும் மேம்பாடும், பெயரும் தேசியமும், ஆளடையாளம் பேணல், பெற்றோரைப் பிரிதல், பிரிந்த குடும்பம் இணைதல், பிள்ளைகளின் சட்டவிரோத மற்றமும் மீளாய்வும், பிள்ளையின் கருத்து, கருத்துச் சுதந்திரம், சிந்தனை மனச்சாட்சி மதவழிபாட்டு சுதந்திரம், கூடும் சுதந்திரம், அந்தரங்கத்தை பேணல், பொருத்தமான தகவல்களை பெறல், பெற்றோரின் கடப்பாடுகள், இம்சை புறக்கணிப்பு மீதான பாதுகாப்பு, குடும்பங்களற்ற பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் தத்தெடுத்தல், அகதிப்பிள்ளை, ஊனமுற்ற பிள்ளை, சுகாதாரமும் சேவைகளும், காலத்திற்கு காலம் பரீசீலித்தல், சமூகப்பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம், கல்வி, கல்வியின் நோக்கங்கள், சிறுபான்மையினரின் பிள்ளைகள், பொழுதுபோக்கு மற்றும் கலாசாரம், சிறுவர்கள் வேலையில் அமர்தல், போதைப் பொருள் துஷ்பிரயோகம், பாலியல் சுரண்டல், விற்பனை பரிவர்த்தனை கடத்தல், வேறுவகையான சுரண்டல்கள், சித்திரவதையும் சுதந்திரத்தை பறித்தலும், ஆயுதப்பிணக்குகள், புனர்வாழ்வு பராமரிப்பு, பாலியல் நியாயாதிக்க நிருவாகம், நிலைபெற்றுள்ள தராதரங்களை மதித்தல், அமுலாக்கல் பேன்றன இவற்றில் அடங்கியுள்ள உரிமைகளாகும். இவற்றினை பெரியவர்களும், பிள்ளைகளும் பரவலாக அறிந்து கொள்ளச் செய்வது அரசின் கடப்பாடாகும் என்பதாகவும் கூறப்பட்டுள்ளதையும் காணலாம்.
எனவே, நமது நாட்டிலும் சரிய உலகிலும் சரி பெரியவர்களாகிய நம்முன் நடக்கின்ற சிறுவர்மீதான அடக்கு முறையை பார்க்க நேரிடுகின்றபோது கரிசனை செலுத்தி அவர்களது உரிமைகளை வழங்கி வாழவைப்பதில் பின்னிற்கக் கூடாது என்பதற்கு பெரியவர்கள் கூறுகின்ற ஒரு பழமொழி 'ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானாக வளர்வான்' என்கிற வாசகத்தையும் நினைவிற்கொண்டு சிறுவர்கள் மீது பற்றுவைத்திட உறுதிபூணுவோம்.
அட்டாளைச்சேனை துருவம் செய்தியாளர்
சாமஸ்ரீ தேசமான்ய எஸ்.எல்.மன்சூர் (கல்விமானி)