Published On: Thursday, November 24, 2011
கிழக்கில் வெள்ளம்; இயல்புநிலை பாதிப்பு
(பி.எம்.எம்.ஏ. காதர்)
அம்பாறை மாவட்டத்தில் கடந்தசில தினங்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கல்முனை, மருதமுனை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு்ள்ளது.
மாவடிப்பள்ளியில் உள்ள தாம்போதி, கிட்டங்கி வீதி ஆகியவற்றின் மேலாக வெள்ளநீர் பரவுகின்றது. இதனால், மக்களின் அன்றாடப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாண்டிருப்பு, மருதமுனை புதிய குடியேற்றத்திட்டத்தில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கடலில் காற்றுடன் கூடிய கொந்தளிப்பு காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் கடல் மீனுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. வெள்ளநீரில் வீச்சுவலையில் மீன்பிடிப்பவர்களின் தொகை அதிகரித்துள்ளது. இதனால் குளத்து மீன்கள் அதிகம் விற்பனைக்கு வருகின்றன.
இந்த அடைமழையினால் விதைத்த வயல்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகரத்தில் வடிகான்களும் வெள்ளத்தினால் நிரம்பி வழிந்தோட முடியாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன.
தொடர் மழையினால் அத்தியவசிப் பொருட்களை கடைக்காரர்கள் அதிக விலைக்கு விற்க முயற்சிக்கின்றனர். அரிசி, மீன், தேங்காய், இறைச்சி மற்றும் மரக்கறி உள்ளிட்ட அத்தியவசிப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.