Published On: Tuesday, November 22, 2011
இந்திய மண்ணின் வளமும் போதிதர்மரும்
(துருவம் இணையத்தளத்தில் வெளியான "7ஆம் அறிவு 'போதிதர்மன்' ஒரு தமிழரா?" என்ற கட்டுரைக்கு பதில் கட்டுரையாக இந்தக் கட்டுரை கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் இங்கு பிரசுரிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்த துருவம் வாசகர் ஒருவர் எமக்கு இதை பிரத்தியேகமாக எழுதியனுப்பியுள்ளார்.)
முதலில் ஓசோ பின்னர் டாக்டர் ருத்ரன் வழி இன்னும் பிற தமிழ்ச் சமூகப் படைப்பாளர்கள் பெரு வாரியாய் உபயோகித்த வார்த்தைகள் "போதி தர்மர்" மற்றும் "ஜென்". இன்று பாமரனும் உபயோகப்படுத்தும் அளவுக்கு "ஏழாம் அறிவு" திரைப்படம் கொணர்ந்து வந்துவிட்டது. என்றும்போல் "தமிழன்"என்கின்ற வெற்றுப் பெருமையோடு படம் முடிந்து திரும்புகின்ற எவரும் அந்த வார்த்தைகளின் ஆழத்தை முழுதாய் உணரவில்லை. பெருமையோடு நிம்மதி நிறைந்த உறக்கத்தை அந்த தினத்தில் அவர்கள் பெற்று இருந்தோராயின் அவர்களை இந்த மண்ணின் சகோதரன் என்று சொல்லிக் கொள்ள வெட்கம் கொள்கிறேன்.
படம் வெளியிடுவதற்கு முன்னும் பின்னும், தமிழ் இணையங்கள் எப்படி எடுத்துச் செல்கின்றன இந்த விசயத்தை என்று கூர்ந்து நோக்குகிறேன். போதிதர்மன் பல்லவன் என்றும், பல்லவன் என்பவன் திராவிடனா? இல்லை ஆரியனா? என்றும், களப்பிரர் சமூகத்தினன் (கர்நாடகம்) என்றும் கேரளப் பகுதியைச் சேர்ந்தவன் என்றும் சர்ச்சைகள் கிளம்பி கேள்விப்போரில் போதிதர்மனும் ஜென்னும் சாதாரணமானவனுக்குப் புரியாதவர்களாய் இன்னும் தூரப்போய் நின்றுகொள்கிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் வரலாற்றுப்பூர்வமாய் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. போதிதர்மன் "ஜென்" என்கிற ஆன்மீக உத்தியை உபயோகப்படுத்தினார் என்பதும் அவர் இன்றையத் தமிழகப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும். அவரைத் தமிழர் என்கிற ஒற்றைப் பொருளுக்குள் அணுகாமல் இந்த (தமிழகம்) மண்ணின் மைந்தன் என்று அலசுவோம்.
குரங்கிலிருந்து மனித மிருகம் பரிமாணம் கொள்கிறது. உணவுக்காக காடுகள், மலைகள் என அலைந்து பிற மிருகங்களையும் தாவரங்களையும் உண்டு செறித்து தன் வம்ச வழியைப் பெருக்கிக் கொள்கிறது. பிற மிருகங்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள சக மிருகங்களின் நட்பு அவசியப்படுககிறது. கூட்டம் கூட்டமாய் வாழ்ந்தால் மட்டுமே தங்கள் வாழ்வு செழிக்குமென அறிந்து கொண்ட விலங்குகளின் அறிவு மிளிர் விடத் தொடங்கியதில் கூட்டம் கூட்டமாய் பயணிக்கிறார்கள். நிரந்தர இருப்பிடம் கொள்ளாது தொடரும் பயணங்களின் இறுதியில் அவர்கள் செழுமையான வண்டல் மண் பிரதேசங்களை அடைகிறார்கள். மனித விலங்குகளுக்கேற்ற சீதோச்ன நிலை, செழுமையான பயிர்கள், நீர் நிலையென விரிந்திருக்கும் காரணிகளால் பயணங்களை நிறுத்திக்கொண்டு தங்களுக்கான நிரந்தர முகவரிகளை அமைத்துக் கொள்கின்றன மிருகங்கள். பின்னாட்களில் இந்தப் பிரதேசங்களில் இருந்துதான் சிந்துச்சமவெளி, மொகஞ்சதாரோ சமவெளி என இன்னபிற நாகரீகங்களை வரலாற்று ஆய்வாளர்கள் பதிந்துவைத்துக் கொண்டனர். நம் மண்ணிற்கான நாகரீகம் கண்டறியப்படவில்லை அல்லது மறைந்து போயிருக்கிறது. இந்த விசயத்தில்தான் நமக்கானத் தொல்மையை/நாகரீகங்களை தொலைத்து விட்டு நிற்கிறோம்.
ஓரிடத்தில் அமரத் தொடங்கிய மனித மிருகங்கள் சிந்தனை ஆற்றலைப் பெற்று மனிதர்களாகிறார்கள். உணவு, இருப்பிடம், உடை மற்றும் இணைக்கானப் போட்டிகளை, சண்டைகளைக் குறைந்து அறிவு வளத்தைக் கூட்டிக் கொள்வதற்கான வாய்ப்பினை இந்த பூலோகம் மனித விலங்கிற்கு மட்டுமே வழங்கியது. நாகரீகம் செழித்து வளர்ந்த மண் மனித விலங்கை மனிதனாக பின்பு வெளிப்புற ஆய்வாளானாக, உள் நோக்கும் சித்தனாக, இயற்கையைப் (கடவுள் பெயர்களில் - மண்ணிர் கேற்றாற்போலத் தேடுதல்களில்) பூசிக்கும் பக்தனாக, நிகழும் ஆச்சர்யங்களின் மௌனியாக, புலப்படாத ஒன்றைத் தேடும் ஞானியாக, குருவாக, கடவுளாக உருப்பெறச் செய்கிறது. இதையே குரங்கிலிருந்து கடவுள் உருப்பெறும் நிகழ்வாகக் கொண்டால், இந்த வளர்ச்சியை மனிதர்கள் ஆக்கிக் கொண்டார்கள் என்பதை விட அவர்கள் தேர்த்தெடுத்துக் கொண்ட மண்ணின் வளத்தைப் பொருத்து அவர்களின் சிந்தனை நீட்சி பெற்றிருக்கக் கூடுமென்பதுதான் என்னுடைய வாதம். மண்ணின் வளத்தைப் பொறுத்து மனிதர்களின் வாழ்க்கைச் சூழலையும் அவர்களுக்கான நாகரீக வளர்வையும் தொடர்புபடுத்தலாம். அந்த வகையில் நம் மூதாதையர் தேர்ந்தெடுத்த இந்த மண் உலகிலேயே மிகுந்த அமைதி சூழ்ந்த, வளங்கள் நிரம்பிய பகுதியாகக் கொண்டாடப்படுகிறது.
நம் மூதாதைய மனிதக் குரங்குகள் பாரதத்தின் தென் பகுதியைத் தேர்ந்தெடுத்து வாசம் கொண்டார்கள். உலகின் எந்தப் பகுதிக்கும் கிட்டிராத, மனிதனுக்கேற்ற சரியான சீதோச்ன நிலை (வருடம் முழுதும்), ஐந்து வகையான நிலங்கள், இயற்கை அன்னையின் இதயப் பகுதியாய், அத்தனை வளங்களும் செழித்த இந்த மண்ணிலிருந்து நம் மூதாதைய எண்ணங்கள் வளரத் தொடங்குகின்றன. உணவு உடை இருப்பிடம் என்பதைத் தேடும் மனிதன் என்பதிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்கிறான்.
தன்னோடு வந்தவர் மட்டுமின்றி புதிதாய் வரும் மனித விலங்குகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இயற்கையாய் தொற்றிக் கொள்கிறது. கூடி நின்று கலைகளை வளர்க்கிறான். இலக்கியங்களைப் படைக்கிறான். ஆனால் ஒரு போதும் இயற்கையை அவன் சேதப் படுத்தியதில்லை. இருக்கின்ற இயற்கை நிலைகளில் எந்த மாற்றத்தையும் கொணராமல் தன்னை இயற்கையின்பால் ஒப்படைத்து தன் வாழ்வாதாரத்தை வகுத்துக் கொண்ட தலையாய இனம் இந்த மண்ணின் இனம். நடனம், இசை, சிற்பம் என எல்லாக் கலைகளிலும் இயற்கையை கடவுள்களின் பெயரில் பூஜித்தான். அவன் கடவுள் என்று வைத்துக் கொண்டது ஒரு நிலையேத் தவிர கண்மூடித் தனமான பூஜை புணஸ்காரங்கள் அல்ல.
இந்த நிலையில் ஆரம்பிக்கிறது அவனது உள்புறத் தேடுதல். இன்னும் நிலைகள் கூடி சித்தனாகிறான். அடுத்த நிலையில் தியானம், அமைதிக்கான வழிமுறைகள், ஜென் என்கிற நிலை (ஜென் என்பது மதமோ கொள்கையோ அல்ல. ஒரு ஆழ்ந்த அமைதி நிலை) என்று அவனால் அவனுக்காக வகுத்துக் கொண்ட இறுதி நிலைகளில் தன்னைக் கட்டுக் கொள்கிறான், பின்பு தன்னை கண்டு கொள்கிறான். ஆர்ப்பாட்டங்களிராத பூரண சன்னியாச நிலையாக அவன் வகுத்துக் கொண்ட நிலைதான் கடவுள் நிலை. கடவுள் நிலை சாத்தியப்பட்ட அல்லது இயற்கை வகுத்துக் கொடுத்த புண்ணிய மண் இந்த மண். இந்த நிலையில் என்னுடைய பார்வை போதி தர்மரை நோக்கி விரிகிறது.
நிச்சயமாய் ஒரே ஒரு போதிதர்மரைக் கொண்ட மண்ணாக இந்த மண் இருந்திருக்க முடியாது. போதிதர்மர்களாக நிறைந்திருந்த ஒரு ஞானிகள் சமூகம் இங்கே வாழ்ந்திருக்கக்கூடும். ஆதலினால் அவர்களின் வழிமுறைகளாய் அனைவரையும் ஏற்றுக் கொள்கிற பக்குவம் அடுத்த சந்ததியர்களுக்கு வந்திருக்கக் கூடும். மனதளவில் எந்த சமூகம் முன்னோக்கிச் சிந்தித்திருக்கிறதோ அந்த சமூகம் பூரணமாய் கலைச் சார்ந்த விசயங்களுக்குத் தாவி இயற்கையோடு ஒன்றி விடக்கூடும். அப்படிப்பட்ட சமூகம் இந்த மண்ணில் நிச்சயமாய் வாழ்ந்திருக்கும், அவர்களுக்கே உரித்தான கடவுள் நிலைகளில். அப்படிப்பட்ட கடவுள்கள் பிற மனித மிருகங்கள் வந்து தாக்குகின்ற போது மரணத்தையும் பூரணமாய் ஏற்றிருக்கக்கூடும். அந்த இனம் அழிந்தே போயிருக்கக் கூடும். அவர்களில் தப்பித்த வம்சாவளியினர் என்றோ அல்லது அவர்களைத் (கடவுள் நிலை) தாக்கி இந்த மண்ணை அபகரித்துக் கொண்ட வம்சாவளியினர் (மனித மிருகம்) என்றோதான் நம்மைக் கூறிக் கொள்ள வேண்டுமேயொழிய "போதி தர்மரின் பேரன்" என்று சொல்லிக் கொள்வது நம் மூதாதர்களையேக் கொச்சைப் படுத்துவதாய் அமையும்.
சரி. எப்படி அவரைச் சொந்தம் கொண்டாடுவது. மிகவும் எளிது. இதற்கு முன்னர் இதே மண்ணில் பிறந்து அவரின் முன்னோர்கள் கூறிய வழிமுறைகளையும், நிலைகளையும், இயற்கை அவருக்குக் கொடுத்த வாய்ப்புக்களையும் பயன்படுத்தி விலங்கு நிலையிலிருந்து கடவுள் நிலையை உய்யும் பக்குவம் கிட்டிய நமக்கு முன்னவர். இந்த மண்ணின் சொந்தக்காரர் என்னும் நிலையிலிருந்து. அவர் அடைந்த நிலைக்கு இந்த மண்ணின் செழிப்புதான் முக்கியம் என்பது என் திண்ணம். நேற்றைக்கு அவரைப் போலவே இந்த மண்ணின் ஆளுமையில் மனித நிலைகளைக் கடந்தவர்கள் வங்கத்துச் சித்தர்கள் விவேகானந்தரும் அரவிந்தரும். இன்னும் வெளியில் விளம்பரப் படுத்தப் படாத போதிதர்மர்கள் வாழ்ந்து கடவுள் நிலை அடைந்திருக்க ஒரே ஒரு போதிதர்மருக்குச் சண்டையிட்டுக் கொள்ளுதல் நம் முன்னோர் நிலைக்கு அழகன்று.
புரிகிறது, இனப்பெயரைக் கொண்டாட வேண்டாமா? வேண்டாம். அதுதான் ஜென். இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவம். சரி இனத்தை சக இனம் அழிக்கிறதே..அது நிலத்திற்கான மோதல். நிச்சயமாய் நாம் ஞானிகள் நிலையில் இல்லை. விலங்கு நிலையில் இருந்து இனத்தைக் காப்போம். நம் மண்ணைக் காப்போம். இந்த மண்ணில் பூரண அமைதியைக் கொணரும்போது நம் குழந்தைகள் விலங்கு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கும் நம் பேரக்குழந்தைகள் இன்னுமொரு நிலை முன்னோக்கியும் செல்லக்கூடும். இந்த நிலைகள் வளர்ந்து போதிதர்மர்கள் வாழும் நம் சந்ததி குழந்தைகள் வருவதற்கு பல நூற்றாண்டுகளாகும். நாம் அதற்கான விதைகளைத் தூவ வேண்டியதில்லை. அதற்கான விதைகள் எற்கனவே விதைக்கப்பட்டாயிற்று. பட்டுப்போனச் செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டிய கடமையிலிருந்து நாம் பிறழ்ந்து விட்டோம் என்பதுதான் உண்மை.
நம் மனித விலங்குகள் (இனம்) ஒன்றுகூடி வாழும் பக்குவம் பெறவேண்டும். நம் இனத்திற்குச் சம்பந்தமில்லாத வேற்றுநில வாழ்வு முறைகளை இடைச் செருகுவதற்கு அனுமதித்தல் கூடாது. நமக்குள் விட்டுக் கொடுக்கும் பரந்த தன்மையைப் பெற வேண்டும். மூதாதையைர்களையும் அவர்களின் ஆழமான (இடைச் செருகிய கண் மூடித்தனமில்லாத) இந்த மண்ணின் பொக்கிச வழிமுறையின் வழி எளிமையைப் பின்பற்ற வேண்டும். வறட்டு ஆடம்பரத்தை ஒழிக்க வேண்டும். இயற்கையைப் பூஜிக்க வேண்டும். ஆழ்மன நிலையில் வாழும் பக்குவம் பெற்றவர்களாக, சந்தோசம் நிரம்பிய, அன்பைப் பொழிகின்ற, ஆன்மீகம் நிரம்பப் பெற்ற (கடவுள் நிலை-மனிதனின் உன்னத இறுதி நிலை) பேரப்பிள்ளைகளைப் பெறுகின்ற குடும்பங்களை வளர்த்தெடுக்க வேண்டும்.
கூடி வாழ்வோம் குடுபங்களாக, நம் சமூகமாக. சமூகம் தவிர்த்து தனிமனித வாழ்வு கோரி, நம்முள் ஊடுருவியிருக்கும் வேற்று நில மனித விலங்குகளைக் களையெடுக்கும் பணியும் நமதே. நம் நோக்கம் போதிதர்மர்கள் பிறப்பதற்கான அழகியச் சூழலை இந்த மண்ணுக்கு மீட்டுக் கொணர்தல்.
(பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை. திறமான புலமையெனில் அதை வெளி நாட்டார் வணக்கஞ் செய்திடல் வேன்டும்)
இந்தியாவிலிருந்து சோமா
sgsomu@yahoo.co.in