Published On: Tuesday, November 22, 2011
பிரித்தானிய தூதுவர் கல்முனைக்கு விஜயம்
(எம்.எம். ஜெஸ்மின்)
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரென்கின் மற்றும் அவரது குழுவினரும் இன்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதில் பொதுச்செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி மேயருமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பரை அவரது கல்முனை இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
யுத்தத்தின் பின்னர் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பொருளாதார சமூக கலாசார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பாதுகாப்பு, வியாபாரம், கல்வி, சமய அனுஷ்டானங்கள், குடியிருப்பு, போக்குவரத்து சம்பந்தமாக விரிவான விளக்கத்தினை சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தூதுவருக்கு எடுத்துக் கூறினார்.
அத்துடன் இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினை, நீர் வசதியினை பெற்றுக் கொள்வதற்காகவும் வெள்ள காலத்தில் நீர் விரைவாக வடிந்தோடுவதற்கு வசதியாக பெரியதொரு வாவியினை அமைப்பதுடன் சுனாமியினால் பாதிக்கப்பட்டு இறைவெளிக்கண்ட வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் 450 குடும்பங்களை சேர்ந்தவர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள றோயல் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து அவர்களுக்கு வசதி செய்து கொடுத்தல் சம்பந்தமாகவும் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக கலந்துரையாடப்பட்டது.
சம்பந்தப்பட்ட பிரதேசங்களையும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் புகைப்படம் மூலமும் நேரடியாகவும் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் காண்பித்தார். கலந்துரையாடலின்போது பிரதேச வர்த்தகர்கள், வைத்திய அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக்கழகங்கள், பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், ஊடகத்துறையை சார்ந்தவர்கள் என பலதுறையினரும் பிரசன்னமாகியிருந்தனர்.