Published On: Monday, November 21, 2011
இன்று பாராளுமன்றத்தில் அமளிதுமளி
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இன்று திங்கட்கிழமை 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சியினர் பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஜனாதிபதி மீது தண்ணீர் போத்தல் வீசித் தாக்கியுள்ளனர்.
இதன்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதோடு ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட எம்.பி. ஹரின் பெர்ணான்டோ மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மீது புத்தகம் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினர் மீது தண்ணீர் போத்தல்களை வீசி எரிந்தனர். அதே சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி தரப்பினரிடமிருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது தண்ணீர் போத்தல் வீசப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியினர் சபையை விட்டு வெளியேறினர்.
மக்களுக்கு நிவாரணம் இல்லாத வரவு - செலவு திட்டம் தயாரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த தம் மீது அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நீதி செயற்படுத்தப்படாத நிலையும் பாராளுமன்றின் நிலையும் கவலையளிப்பதாக அவர் கூறினார்.
எதிர்கட்சி பிளவுபட்டு காணப்பட்டால் அது சிறந்த விடயமாக இருக்காது. ஒன்றிணைந்து இருக்க வேண்டும். தனிப்பட்ட குரோதங்களை ஒருபக்கம் தள்ளிவைத்து எதிர்கட்சி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மக்களுக்கு சிறந்த விடயங்களை அரசு முன்வைக்கும்போது அதற்கு ஆதரவு வழங்க வேண்டும். எதிரானவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். தனிப்பட்ட நலனுக்காக செயற்படாது பொது நலனுக்காக செயற்பட வேண்டும். என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது வரவு - செலவுத் திட்ட உரையின் இறுதியில் எதிர்கட்சிக்கு அறிவுரை வழங்கினார்.