Published On: Monday, November 21, 2011
ரிஸானாவை விட்டுவிடுங்கள் - தந்தை
மரண தண்டனைக் கைதியாக இருக்கும் ரிஸானா நபீக்குக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஊடாக நாம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று அந்நாட்டின் அல்-உத்தைபி கோத்திரத் தலைவர் முஹம்மத் பைஹான் சுரைம் அல் உத்தைபி உறுதியளித்துள்ளார்.
மரண தண்டனைக் கைதியாக இருக்கும் ரிஸானா நபீக்குக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் உயர் மட்டக் குழுவொன்றை அந்நாட்டுக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்தது.
அக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ. எச். எம். அஸ்வர், எம். எஸ். எம். தெளபீக், மேல் மாகாண ஆளுனர் எஸ். அலவி மெளலானா, வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் நிஸங்க விஜயரட்ன, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, வெளி விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் இப்றாஹிம் அன்ஸார், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதி பொதுச் செயலாளர் மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம், குவைத் நாட்டிலுள்ள இலங்கைத் தூதரக விஸா அதிகாரி மெளலவி எம்.பி.எம். சரூக், மெளலவி எம்.ஜே.எம். இம்ரான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இக்குழுவினருடன் ரிஸானா நபீக்கின் பெற்றோரும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இக்குழுவினர் ரிஸானா நபீக் வேலை செய்த வீட்டு உரிமையாளரையும், அவர்கள் கட்டுப்பட்டு இருக்கின்ற கோத்திர தலைவர் உள்ளிட்ட முக்கியஸ் தர்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் அஹமத் ஜவாத் மேற்கொண்டார்.
இதற்கேற்ப சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்திலிருந்து 400 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள “தவாத்துமி” என்ற பிரதேசத்திலுள்ள அல்–இம்ஸ் கிராமத்திற்கு இலங்கைக் குழுவினர் கடந்த வியாழனன்று பயணம் செய்தனர். அல் - உத்தைபி கோத்திரத்தின் செல்வாக்கு மிக்க இக் கிராமத்தின் நாயிப் அல் உத்தைபி என்பவரின் வீட்டிலேயே ரிஸானா நபீக் பணிப்பெண்ணாக பணியாற்றியுள்ளார்.
அல் உத்தைபி கோத்திர தலைவரும், அக்கோத்திரத்தின் முக்கியஸ்தர்களும் தம்மைச் சந்திக்கவென இலங்கைக்குழுவினர் வருவதை அறிந்ததும் அங்கு உச்ச அள வில் வரவேற்பு அளித்ததுடன் விருந்துப சாரமும் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகள் அங்குள்ள மண்டபத்தில் மேற்கொள்ளப் பட்டிருந்தது.
இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அல் உத்தைபி கோத்திர தலைவரும், அக்கோத்திரத்தின் முக்கியஸ்தர்களுமாக இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தின் போது அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதி பொதுச் செயலாளர் மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம் இலங்கை குழுவினரின் வருகையின் நோக்கத்தை அறபு மொழியில் எடுத்துரைத்தார்.
இலங்கை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடு. இந்நாட்டில் முஸ் லிம்கள் தங்கள் சமய, கலாசார செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. தொழுகைக்கான அதான் ஐவேளையும் அரசாங்க வானொலி யில் ஒலி பரப்பப்படுகின்றது. இது பெளத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. என்றாலும் முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழும் சகல இன, மத மக்களுடனும் ஐக்கியமாகவும், அந் நியோன்யமாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்நாட்டின் ஜனாதிபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி வகிக்கின்றார். அவர் ஒரு பெளத்தர் எனினும் பலஸ்தீன முஸ்லிம்களின் விமோசனத்திற்காகவும், விடிவுக்காகவும் முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒத்துழைப்பு நல்கி வருகின்றார். அவரைக் கெளரவிக்கும் வகையில் பலஸ்தீனிலுள்ள வீதியொன்றுக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் ரிஸானா நபீக்கின் விவ காரத்தை எமது ஜனாதிபதி தமது பிள்ளையின் விவகாரம் போன்றே விசேட கவனம் செலுத்தி வருகின்றார். ரிஸானா நபீக்குக்கு மன்னிப்பு கிடைக்கப் பெற்று விடுதலை கிடைக்க வேண்டும் என்பதிலும் அதி கூடிய கவனம் செலுத்துகின்றார்.
நாம் சவூதிஅரேபியாவின் ஷரிஆவை பெரிதும் மதிப்பவர்கள். அந்நாட்டின் நீதியையும், நீதித்துறையையும், நீதிமன்றங் களையும், நீதிபதிகளையும் மதிக்கின்றவர்கள். என்றாலும் நாம் ரிஸானா நபீக்குக்கு பரிந்து பேச இங்கு வரவில்லை. மரண தண்டனை கைதியாக இருக்கும் ரிஸானாவுக்கு இஸ்லாமிய ஷரீஆ கண்ணோட்டத்தில் அல் – குர்ஆனின் சட்டங்களுக்கு அமைய மன்னிப்பு வழங்குமாறு கோரவே இங்கு வந்துள்ளோம்.
இஸ்லாம் அன்பு, கருணை, இரக்கம், சாந்தி, சமாதானம் மனிதாபிமானம் என்பவற்றைப் போதிக்கும் மார்க்கம். அந்த வகையில் உங்களது கோத்திரத்தின் மூலமும், சவூதி அரேபிய அரசின் ஊடா கவும் எமக்கு திருப்திகரமான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது அதேநேரம் ரிஸானா பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய வீட்டின் பெற்றோரை சந்தித்து இவ் விடயத்தில் அக்குடும்பத்தினரின் நல்ல பதிலையும் பெற்றுத் தருவீர்கள் என்றும் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
இக் கூட்டத்தில் மெளலவி இம்ரான் இஸ்லாமிய ஷரீஆ தொடர்பாக அரபு மொழியில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து இக் கூட்டத்தில் பங்கு பற்றிய அல் - உத்தைபி கோத்திர முக்கியஸ்தர்கள் சகலரும் ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென ஒரே குரலில் குறிப்பிட்டனர்.
இங்கு மேல் மாகாண ஆளுனர் எஸ். அலவி மெளலானாவும், பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வரும் இலங் கைக்கும் அரபு மக்களுக்குமிடையிலான தொடர்புகளை வரலாற்று ரீதியாக எடுத்துக் கூறினர். இதனையிட்டு கோத்திர தலைவரும், இதர முக்கியஸ்தர்களும் பெரிதும் சந்தோஷமடைந்தனர்.
எமது பிரதேசத்திற்கு இலங்கையிலிருந்து இவ்வாறான பிரதிநிதிகள் அடங்கிய குழு வருகை தந்திருப்பது இதுவே முதற் தடவை. இதனையிட்டு நாம் பெரிதும் சந்தோஷமடைகின்றோம். ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஊடாக சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று இங்கு கோத்திரத் தலைவர் கூறினார்.
இச்சமயம் ரிஸானாவின் தந்தை நபீக் கோத்திர தலைவரின் கரங்களைப் பற்றி ரீஸானாவுக்கு மன்னிப்பு கிடைக்கப்பெறவும், விடுதலையாகவும் வழி செய்யுமாறு கோரி கண்ணீர் விட்டு அழுது புலம்பினார். இவ்வேளையில் கோத்திர தலைவரும் உணர்வுபூர்வமாக கண்ணீர் சிந்தினார்.
இதனை பின்னர் ரிஸானா நபீக் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய வீட்டின் குடும்பத் தலைவியின் தந்தையான மிர்தாஸ் பஹ்த் அல் உத்தைபியையும் இலங்கைக் குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர். அங்கும் இலங்கைக் குழுவினருக்கு நல்ல வரவேற்புடன் விருந்துபசாரமும் அளிக்கப்பட்டது.