Published On: Thursday, March 08, 2012
அனுமதி இல்லாமல் இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வருவதற்கு தடை

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, இலங்கையில் தமிழர்கள் மற்றும் அவர்களது உரிமைகள் குறித்து அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. சிங்களர்களுக்கு இணையாக அங்குள்ள தமிழர்களுக்கு கெளரவமாக வாழும் உரிமை, சுயமரியாதை, சமமான அரசியல் சட்டப்பூர்வமான அந்தஸ்து போன்றவற்றை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்திருக்கிறது. அதை நீங்களும் நன்கு அறிவீர்கள்.
இந்த பின்னணியில் இலங்கையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், பிரபலங்களும் தனிப்பட்ட பயணமாக தமிழகம் வருவது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் வருகை பற்றி தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. இலங்கை அதிபரின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் அதுபோன்றதொரு பயணத்தை 09.01.2012 மற்றும் 10.01.2012 ஆகிய திகதிகளில் ராமேஸ்வரத்துக்கு மேற்கொண்டார். அங்கு அவரை சிலர் தாக்க முயற்சி செய்தனர். அவர் வருகை பற்றி இலங்கை அரசாங்கத்திடம் இருந்தோ, அல்லது இந்திய அரசிடம் இருந்தோ தமிழக அரசுக்கு தகவல் எதுவும் வராததால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை.
நடேசனுக்கு எதிராக நடந்த தாக்குதல் முயற்சி தொடர்பாக, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதரிடம் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் ஏற்றுக் கொள்ள முடியாததும் முழுவதும் நியாயமற்றதும் ஆகும். இலங்கையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் தகவல் எதுவும் தெரிவிக்காமல் அடிக்கடி இங்கு வருகை புரிவதால் தமிழக அரசு சந்தித்துவரும் சிரமங்களை சுட்டிக்காட்டி உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு 16.09.2011 மற்றும் 24.02.2012 ஆகிய திகதிகளில் தமிழக அரசு கடிதம் எழுதி இருப்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
எனவே, தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கை பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை கட்டுப்படுத்த வேண்டும். இனிமேல், தமிழக அரசுடன் ஆலோசித்த பிறகே இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வர அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.





