Published On: Thursday, March 08, 2012
செக் மோசடி வழக்கு; அசாருதீனுக்கு 15 இலட்சம் ரூபா அபராதம்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாகவும் உள்ளார். டெல்லியைச் சேர்ந்தவரான சஞ்சய் சோளங்கி என்ற தொழில் அதிபரிடம் முகமது அசாருதீன் சொத்து விற்பனை குறித்து ரூ. 1.5 கோடிக்கான செக்கை கொடுத்தார். ஆனால், அசாருதீன் வங்கி கணக்கில் பணம் இல்லாத காரணத்தினால் அவை திரும்பி வந்தன. அதனையடுத்து, அசாருதீன் அவருக்கு கொடுத்த மேலும் 2 செக்குகளும் திரும்பி வந்தன. இதனால் டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அசாருதீனுக்கு எதிராக சோளங்கி வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு விசாரணையின்போது அசாருதீன் தரப்பு வக்கீல், அசாருதீன் உத்தர பிரதேச தேர்தலில் மும்முரமாக இருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை. ஆகையால் இவ்வழக்கிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்குமாறு மனு கொடுத்தார். ஆனால் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விக்ராந்த் வைத் இம்மனுவை தள்ளுபடி செய்து அவருக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
மேலும், வரும் மார்ச் மாதம் 7ஆம் தேதியன்று அசாருத்தீன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று நடந்த விசாரணையின்போது அசாருதீனுக்கு 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.





