Published On: Thursday, March 08, 2012
பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் - பிரதீபா பாட்டீல்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
சுயசார்பை எட்டும் வகையில் பெண்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவி பிரதீபா பாட்டீல் தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அது குறித்து நாட்டு மக்களுக்கு விடுத்த செய்திக் குறிப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க வகையில் செயல்பட்ட பெண்களை குடியரசுத் தலைவர் பாராட்டினார். அவர் மேலும் தெரிவித்தது; "பெண்கள் சுயசார்பை எட்டும் வகையில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கச் செய்ய வேண்டிய செயல்பாடுகள் நிறைய உள்ளன. பாலினச் சமமின்மை, ஏழ்மையை ஒழித்தல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையிலான சமூகப் பழக்கவழக்கங்களை களைதல் ஆகியவற்றில் பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம், குடும்பம், சமுதாயம், ஆகியவற்றைக் கட்டமைப்பதில் வியக்கத்தக்க வகையில் பணியாற்றி வரும் சாதாரணப் பெண்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுவேயாகும். அதே சமயம் பெண்கள் தொடர்பான அனைத்து வகை முன்னேற்றங்களிலும் குறிக்கோள்களை அடைந்ததை நினைவுபடுத்தவும், மாற்றத்துக்கு வழிகோலும் திட்டங்களை செயல்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்டின் விதியை சீரமைக்க ஓய்வில்லாமல் பாடுபடும் பெண்களை நான் பாராட்டுகிறேன்'' என்று பிரதிபா கூறினார்.