Published On: Thursday, March 08, 2012
ஜெ. ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாள் தரிசனம்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்த முதல்வர் ஜெயலலிதா, அவர் பிறந்த மகம் நட்சத்திர நாளில் ரங்கநாதரை சேவித்தார். அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 24ஆம் திகதி வருகிறது. மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்த ஜெயலலிதா, தன் நட்சத்திர நாளில் பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம்.

மாசி மாதம் 24ஆம் திகதியான நேற்று அவர் பிறந்த மகம் நட்சத்திர நாள். இதையடுத்து ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வமாக விளங்கும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்ய நேற்று மாலை அவர் தனிவிமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் சென்னை பை-பாஸ் சாலை, திருவானைக்காவல் கும்பகோணத்தான் சாலை, மாம்பழச் சாலை, அம்மாமண்டப சாலை, ஸ்ரீரங்கம் ராகவேந்திரா ஆர்ச் வழியாக திருவடித்தெரு, மேல உத்திரவீதி வழியாக, "ரங்கா ரங்கா' கோபுரம் வந்தார்.
"ரங்கா ரங்கா' கோபுரம் முன், ஜெயலலிதாவுக்கு தங்கக்குடத்தில் பூரண கும்ப மரியாதையை, கோவிலின் ஆஸ்தான பட்டர்கள் சுந்தர் பட்டர், நந்து பட்டர் வழங்கினர். "ரங்கா ரங்கா' கோபுரம் வழியாக சென்ற ஜெயலலிதா, கருடாழ்வார் சன்னதியில் தரிசனம் செய்தார். ஆரியபட்டாள் வாசல் வழியாக சென்று, மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்தார். அப்போது ஜெயலலிதா வழங்கிய பட்டு வஸ்திரம், ரங்கநாதருக்கு சார்த்தும்படி செய்யப்பட்டிருந்தது.
ஜெயலலிதா பெயரில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. பெருமாளை சேவித்த ஜெயலலிதாவுக்கு, கோவில் சார்பில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் ஒரே ஒருநாள் மட்டும் நம்பெருமாள், தாயாருடன் சேர்ந்து சேவை சாதிக்கும், "சேத்தி ஸேவை' படம் வழங்கப்பட்டது. திருக்கொட்டாரம் வழியாக பேட்டரி காரில் சென்று தாயார் சன்னதியில் தரிசனம் செய்தபிறகு, பேட்டரி கார் மூலம், வசந்த மண்டபம், நந்தவனம் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதி மற்றும் உடையவர் (ராமானுஜர்) சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் நாதஸ்வரம், தவில் வாசிக்கும் வித்வான்கள் மூன்று பேருக்கு பட்டு வேட்டிகள், துண்டுகளும், சுந்தர் பட்டர் உள்ளிட்ட நான்கு பேருக்கு பட்டு வேட்டிகள், சேலைகளையும் வழங்கினார். மாலை 6.40 மணிக்கு, கிழக்கு வெள்ளைக்கோபுரம் வழியாக வெளியே வந்த ஜெயலலிதா, வந்த வழியே மீண்டும் கார் மூலம் திருச்சி விமான நிலையம் திரும்பினார். அவரது தனி விமானம் இரவு 7.30 மணிக்கு, திருச்சியில் இருந்து சென்னைக்குக் கிளம்பியது.