Published On: Saturday, November 19, 2011
2016இல் சகலருக்கும் சிங்கள, தமிழ் மொழி
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவியேற்பின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று சனிக்கிழமை பி.ப. 4 மணிக்கு நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் மக்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழி அறிவினை இலவசமாகப் பெற்றுக் கொடுக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
2014ஆம் ஆண்டிலே அனைத்து இலங்கையர்களுக்கும் மொழி அறிவினைப் பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் பிரகாரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இருமொழி அறிவினை பெற்றுக் கொடுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவின் பிரகாரம் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் வழிகாட்டலின் கீழ் சிங்கள இனத்தவர்களுக்கு தமிழ் மொழி தமிழ் இனத்தவர்களுக்கு சிங்கள மொழி என்பன பற்றிய அறிவினை நாடளாவிய ரீதியில் பெற்றுக் கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள மொழி சங்கங்கள் ஊடாக இந்த வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்கள் இளைஞர்கள் முதியோர்கள் என்ற ரீதியில் வகுப்புகள் இடம்பெற உள்ளதுடன் அதற்குத் தேவையான ஆசிரியர்கள் மற்றும் புத்தகங்கள் என்பன தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் இலவசமாக வழங்கப்பட உள்ளமை விசேட அம்சமாகும்.