Published On: Saturday, November 19, 2011
எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு
எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். 17 நாள் போராட்டத்துக்குப் பிறகு முபாரக் பதவி விலகினார். அதை தொடர்ந்து ஆட்சி இராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இந்த மாதம் 28ஆம் திகதி புதிய அதிபர், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அரசியல் சட்டத்தில் சில மாற்றங்களை செய்ய ராணுவ ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராணுவம் தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துகொள்ள விரும்புகிறது. தேர்தல் நடத்தி புதிய அதிபரை தேர்ந்தெடுக்க அரசு விரும்பவில்லை என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.
மேலும், முபாரக் பதவி விலகி ராணுவ ஆட்சி ஏற்பட்ட பிறகு மக்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. முன்பு இருந்ததை விட மிகவும் கீழ்நிலையில் உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் தலைநகர் கெய்ரோவில் உள்ள தக்ரீர் மைதானத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு திரண்ட ஒரு லட்சம் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உடனே பாராளுமன்ற தேர்தலை நடத்தி மக்கள் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதே போன்று எகிப்தில் 2ஆவது பெரிய நகரமான அலெக் சாண்ட்ரியாவிலும் நேற்று போராட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் இளைஞர்கள் வீதிகளில் திரண்டனர். இதனால் எகிப்தில் மீண்டும் பதட்டம் நிலவுகிறது. இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.