Published On: Saturday, November 19, 2011
மன்னர் நீதிமன்றில் ரிஸானாவின் வழக்கு
சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக்கின் வழக்கு விசாரணை பிராந்திய நீதிமன்றத்தில் இருந்து மன்னரின் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தகவலை சவூதி அரேபியா சென்றுள்ள ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. அங்கிருந்து அறிவித்துள்ளார்.
ரிஸானாவின் விடுதலை தொடர்பாக சவூதி உயர்மட்டத்தினரைச் சந்திக்க சென்றுள்ள இலங்கைக் குழு ரியாத்தில் இருந்து 520 கிலோமீற்றர் தூரத்திலுள்ள அல்-தலாதீ மாநிலத்துக்குச் சென்று மரணித்த குழந்தையின் நெருங்கிய உறவினர்களைச் சந்தித்தது. ரிஸானாவை எந்த வகையிலாவது விடுதலை செய்யுமாறு இக்குழு கேட்டுக் கொண்டது. முதன் முதலில் இக்குழு ரியாத்தில் மரணமுற்ற குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசியது.
இக்குழுவில் சென்றிருந்த ஆளுநர் எஸ். அலவி மெளலானா மரணித்த குழந்தையின் உறவினர்களின் கரங்களைப் பிடித்து கண்ணீர் மல்கிய நிலையில் ரிஸானாவை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அல்-தலாதீ மாநில நீதிமன்றத் தலைவர் ஷேக் கபீர் முஹம்மத் ரைஹான் அல்-அஸாரியையும் குழுவினர் சந்தித்துப் பேசினர்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தெளபீக், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் நிஸங்க விஜேரத்ன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் மேலதி செயலாளர் ஐ. எம். அன்ஸார் மெளலவி தாஷிம், மெளலவி சறூக், ஐ. ஆர். ஓ. பிரதிநிதி இம்ரான் ஜமால்தீன் ஆகியோரும் குழுவில் இடம்பெறுகின்றனர்.
தான் பணியாற்றிய வீட்டில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையை ரிஸானா நபீக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சவூதி அரேபிய நீதிமன்றம் கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி தூக்குத் தண்டனை வழங்க தீர்ப்பளித்தமை தெரிந்ததே.