Published On: Wednesday, December 28, 2011
யாழில் இருந்து 850 கி.மீ தூரத்தில் தாழமுக்கம்

யாழ்ப்பாணத்திலிருந்து 850 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் காணப்படும் சூறாவளி தொடர்ந்தும் வலுவடைந்து வருவதாக வளிமண்டலத் திணைக்களத்தின் வானிலையாளர் யசரத்ன நேற்றுத் தெரிவித்தார். இந்த சூறாவளிக்கு தேன் (Thane) எனப் பெயரிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் இச்சூறாவளியின் நேரடி பாதிப்பு இலங்கைக்கு இராது. எனினும் வடக்கு, கிழக்கு ஆழ்கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்களும், கப்பல் பணியாளர்களும் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதேநேரம் மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் கரையை அண்டிய கடற்பரப்பில் விழிப்புடன் கடற்றொழிலில் ஈடுபட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வங்காள விரிகுடாவில் உருவாகும் சூறாவளிகளுக்கு இப்பிராந்திய நாடுகளே பெயரிடுவது வழமை. அந்த வகையில் இச்சூறாவளிக்கு பெயரிடும் முறை மியன்மர் நாட்டுக்கு கிடைக்கப்பெற்று அந்நாடு தேன் (Thane) எனவும் பெயரிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வட மேற்காகக் காணப்படும் இச்சூறாவளி மெதுமெது வாகவே நகர்கின்றது. இது வட தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களை எதிர்வரும் 29ஆம், 30ஆம் திகதிகளில் அடையாளம் என்றார்.