Published On: Wednesday, December 28, 2011
முல்லைத்தீவில் கடல் ஊருக்குள் ஊடுருவல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று முன்தினமிரவு திடீரென கடல் அலைகள் ஊருக்குள் ஊடுருவியதால் அப்பிரதேசங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் பி. ஆர். என். குளாப் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் செல்வபுரம் முதல் கொக்கிளாய் வரையான கரையோர பிரதேசத்தில் நேற்று முன்தினமிரவு 10.00 மணியளவில் திடீரென கடலலைகள் ஊருக்குள் பிரவேசித்தது என்றும் அவர் கூறினார். கரையிலிருந்து சுமார் ஐம்பது அடிகள் தூரத்திற்கு இப்பிரதேசங்களில் கடலலைகள் ஊருக்குள் வந்ததால் இது சுனாமி அனர்த்தமாக இருக்கலாமெனக் கருதிய தாலேயே இப்பதற்றம் உருவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரவு 10.00 மணியளவில் ஊருக்குள் பிரவேசித்த கடல் நீர் மறுநாள் அதிகாலை 1.00 மணிவரையும் காணப்பட்டதுடன் அதன் பின்பே வடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்திலிருந்து 850 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் காணப்படும் சூறாவளியின் தாக்கம் காரணமாகவே கடல் நீர் ஊருக்குள் வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.