Published On: Wednesday, December 28, 2011
ரோபோ உருவாக்கி தமிழ் மாணவன் சாதனை
விவசாயிகள் பயிர்களை விலங்குகளிலிருந்தும், பறவைகளிலிருந்தும் பாதுகாப்பதற்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட இலத்திரனியல் ரோபோ பொம்மை ஒன்றை மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் சிவஞானம் பிரசன்னா உருவாக்கியுள்ளார். இப்பொம்மை விவசாயி எங்கிருந்தாலும் சரி தனது கையடக்க தொலைபேசியில் இருந்து அழைப்பை (Miss call) ஏற்படுத்தும் போதெல்லாம் பொம்மை ஒலி எழுப்பி கையை அசைத்து செயற்படும். இதேபோன்று பாதுகாப்பு முறைமை (Securaty Sisytem) ஒன்றும் அம்மாணவனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெறுமதி வாய்ந்த உடமைகள், ஆவணங்கள் பேணப்படும் அறைகளில் இம்முறைமையைப் பொருத்தி விட்டால் யாராவது இங்கு நடமாடினால் அங்கிருக்கும் கையடக்க தொலைபேசி ஒன்று தன்னிச்சையாக இயங்கி பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்தும். இக்கையடக்க தொலைபேசிகள் இரண்டும் கமரா வசதி உள்ளவையானால் அங்கு நடமாடியது யாரெனவும் கண்டுகொள்ளலாம்.
இம்மாத முற்பகுதியில் கல்வி அமைச்சினால், Intel நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் அனுசரணையுடன் கொழும்பு பண்டாரநாயக்கா மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப, வர்த்தக கண்காட்சியில் அகில இலங்கை ரீதியாக புதிய தகவல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களில் முன்னோடியாக விளங்கும் 20 பாடசாலைகள் பங்கு பற்றின. இதில் மட்டக்களப்பு பட்டிருப்பு, தேசிய பாடசாலை மாணவனின் கண்டுபிடிப்புக்களும் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் பங்குபற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள் இதனைப் பாராட்டினர்.