Published On: Saturday, December 31, 2011
பெறுபேறுகளில் தில்லுமுல்லு; நடந்தது என்ன?

(தற்போது வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு சர்ச்சைகளையும், சிக்கல்களையும் ஆராயும் கட்டுரை)
(சம்யா)
இம்முறை வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் நம்பகத்தன்மையற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது. கடந்த (2011) ஆகஸ்டில் நடைபெற்ற இப்பரீட்சையில் தோற்றிய ஒவ்வொரு மாணவனும் மிகப்பெரியதோர் எதிர்பார்ப்புடனே பரீட்சைக்கு முகங்கொடுத்தனர். இந்நிலையில் பரீட்சைத் திணைக்களம் எதிர்வரும் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு முன்னர் வெளியிடப்படும் என்று அறிவித்த நாள் முதல் மாணவர்கள் இன்று வெளிவரும், நாளை வரும் என்று இலவுகாத்த கிளிபோல பரீட்சை முடிவுகளை எதிர்பார்க்கத் தொடங்கினர். இறுதியில் பரீட்சை முடிவுகள் வெளியாவதில் தாமதமடைந்து நாட்டின் ஜனாதிபதி தலையிட்டு முடிவுகளை வெளியிட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு காரணம் யார்?
பரீட்சை முடிவுகளை இவ்வளவு சீக்கிரமாக வெளியாக்குவதற்கு சில முக்கிய புள்ளிகள் முயன்றதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நபர்களுடைய பிள்ளைகள் வெளிநாட்டில் கற்பதற்கு இந்த டிசம்பர் இறுதிக்குள் பெறுபேறுகள் வெளியானால் உடனடியாகவே விண்ணப்பிக்க முடியும் என்பதனால் இந்த அவசர ஏற்பாடாக அமைந்திருந்தமையினால் அவசர அவசரமாக வேலைகளை செய்ய முற்பட்டபோது தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது இறுதியில் ஒரு தேசியப் பிரச்சினையாக மாறிவிடும் என்பதை கனவிலும் நினைக்காத பரீட்டைத் திணைக்களமும், அதிகாரிகளும் இவ்வாறு கிணறு வெட்டப் பூதம் வெளிக்கிட்ட கதை போலாகிவிட்டது. இதனைப் சந்தர்ப்பமாக பலரும் பயன்படுத்திக் கொண்டதுதான் விசேடமாகும். உதாரணமாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் நீதிமன்றம் செல்லப்போவதாகவும், மனித உரிமைகள் அமைப்பிடம் முறையிடுமாறு மாணவர்கள் கோரப்பட்டனர். யார் என்ன சொன்னாலும் பரீட்சை முடிவுகளில் மாற்றம் இல்லை என்று பரீட்சை திணைக்களம் அடித்துக் கூறியுள்ள நிலையில் பரீட்சையின் முடிவுகளை சிறப்பானதாக எதிர்பார்த்த மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்iயாகும்.
சுதந்திரமாக இயங்கும் பரீட்சைத் திணைக்களத்தின் செயற்பாடுகளில் இவ்வாறு தலையிடுவதற்கு காரணம் அனைத்தும் அரசியல் மயப்படுத்தப்பட்டமைதான் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். தெருவால் சென்றதை சீலைக்குள் அள்ளிப்போட்ட நிலைதான் இன்று பரீட்சைத் தினைக்களத்திற்கு ஏற்பட்டுள்ளது. எவ்வித அறிவித்தலும் இன்றி வழமைபோன்று அனைத்து வேலைகளும் முடிவுற்றவுடன் பரீட்சை முடிவுகளை அறிவித்திருக்கலாம். இதனை இந்தளவுக்கு மக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தியது பரீட்சைத் திணைக்களம் என்றே கூறப்படுகின்றது. இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்துக் வருகின்ற அரசின் மீதான கட்டமைப்பை குலைக்கும் செயலாக இது பார்க்கப்படுவதாக கூறப்படுகின்றது. ஆண்டாண்டு காலமாக செய்து வருகின்ற ஒரு சிறிய விடயம் இந்தளவுக்கு பிரச்சினைகளைப் பெரிதாக்கி தேசியப் பிரச்சினைகளாக மாற்றியவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்து கொள்ளாமலும் இல்லை.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை விவாதிக்க பாராளுமன்ற நிலையில் கட்டளையின் பிரகாரம் உடனடியாக பாரளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பான அறிவித்தலை விடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் காரியவசம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேவேளை கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் பற்றிய பிரச்சினைகளுக்கு விசேட குழுவினை அமைத்து விசாரணை ஒன்றை நடாத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருக்கிறார். இது சம்பந்தமாக கல்வியமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், பரீட்சைப் பெறுபேறுகளில் ஏற்பட்ட சிக்கல்களானது Z புள்ளி தரவரிசையில் மாத்திரம்தான் ஒழுங்கீனங்கள் உள்ளன. பெறுபேறுகளில் பிரச்சினை இல்லை எனினும் சில தீயசக்திகள் இவ்விடயத்தில் அரசியல் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன அதனை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். இது இவ்வாறிருக்க பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க உடனடியாக இராஜினாமா செய்யவேண்டும் என்று கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனசிங்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சுஜீவ சேனசிங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; “சிறந்த கொள்கைகளினால் ஆளப்படுகின்ற ஒரு நாட்டில் இதற்குப் பொறுப்பான அமைச்சர் இராஜினாமா செய்திருப்பார். க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிய எந்தவொரு பிள்ளையின் வாழ்விலும் ஒரு திருப்புமுனையாக அமைவதே இப்பரீட்சையின் முடிவுகளாகும். ஏனெனில் அவனது எதிர்காலமே அதில் தங்கியுள்ளது. ஆனால், அதிகாரிகள் இதில் விளையாடியுள்ளனர்” என்றும் தெரிவித்தார். “அதுமட்டுமல்ல இப்பரீட்சை பெறுபேறு வெளியீட்டில் ஏற்பட்ட தவறு என்று சுலபமாக தப்பித்துக்கொள்ள முடியாது. இது முதலாவது தவறு அல்ல. எண்ணற்ற தடவைகள் இத்திணைக்களம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. வினாப்பத்திரங்களில் தவறான வினாக்கள், கொள்கைகளை அமுல்படுத்தாமை, காலத்திற்கு ஒவ்வாத கொள்கைகள் போன்றவற்றுக்கு அரசாங்கமே நேரடியான பொறுப்பைக் கூறவேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “இச்செயற்பாடானது இளைஞர்களை விரக்திக்குள்ளாக்கும் நிலையைத் தோற்றுவிக்கும். அத்துடன் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் எதிர்காலத்தையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கிவிடும். இதனைத் தொடர்ந்து அரசு மேற்கொள்வது கேலிக்கிடமானது” எனவும் சுஜீவ சேனசிங்க எம்.பி. தெரிவித்திருந்தார். பரீட்சைப் பெறுபேற்றின் தாமதத்திற்கு காரணம் பற்றி தெரிவித்த உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயசிங்க “நிரல்படுத்தல் பட்டியலை தயாரிக்கும்போது ஏற்பட்ட தவறுகள் காரணமாகவே இறுதி நேரத்தில் வெளியிடப்பட பெறுபேறுகளில் மாவட்டம் மற்றும் தேசிய நிரல்படுத்தலை செல்லுபடியற்றதாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும், இருப்பினும் Z புள்ளிகளில் எவ்விதமான தவறுகளும் இல்லை” என உயர்கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார்.
பரீட்சை பெறுபேற்றுடன் தற்காலிமாக வெளியிடப்பட்டிருந்த மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெறுபேறுகள் மாத்திரமே திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் வெளியிடப்பட்டுள்ள Z புள்ளி மற்றும் பெறுபேறுகளில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படமாட்டாது எனவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்திருந்தார். மேலும், “மாவட்ட ரீதியிலான கணிப்பீட்டில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாகவும். தேசிய ரீதியிலான நிலைப்படுத்தலில் தவறுகள் ஏற்படவேயில்லை” எனக்கூறும் பரீட்சை ஆணையார் பரீட்சை பெறுபேறுகள் தவறு என முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களை முற்றாக நிராகித்துள்ளார். தவறான சுட்டெண்களை வழங்கி தவறான பெறுபேறுகளைப் பெற்றமைக்குத் தான் பொறுப்பல்ல எனவும், “பாத்திரக் கடைக்குள் மாடு நுழைந்ததுபோல சில ஊடகங்கள் தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்து சமூகத்தில் குழப்பநிலையை ஏற்படுத்த முயற்சித்தமை மிகவும் கவலைக்குறிய விடயமாகவே தன்னால் பார்க்கப்படுகிறது” என்றும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளமை கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்களாகும்.
பொதுவாக ஊடகத்துறையானது ஒவ்வொரு செயற்பாட்டையும் அவதானித்துக் கொண்டே இருக்கின்றது. எங்கே பிழை நடக்கிறது என்பதை நாட்டு மக்களுக்குச் சுட்டிக் காட்டுகின்ற விடயத்தில் போட்டி போட்டுக்கொண்டு விமர்சிக்கின்றன. அதேவேளை சரியான முறையில் விடயம் நடைபெற்றிருந்தால் அதனை வரவேற்கின்ற விடயத்தில் ஊடகங்கள் பாரபட்சம் காட்ட முயலக்கூடாது என்பதை சுட்டிக்காட்டத்தான் வேண்டும். பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டில் சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும் மக்கள் மயப்படுத்தியது ஊடகங்கள் என்று கூறுவதும் தவறான விடயமாகும். எங்கே பிழை நடந்துள்ளது என்பதை ஆராய்கின்ற தன்மையும் ஊடகங்களுக்கு உண்டல்லவா? ஊடக சுதந்திரத்தன்மை முற்றுமுழுதாக பின்பற்றப்பட்டிருந்தாலும் உண்மைத் தன்மையான விடயங்களை மக்கள் முன்கொண்டுவரவேண்டிய கடப்பாடுகள் ஊடக தர்மத்திற்கு உண்டு.
இந்நிலைமையினை சரியாகப் பயன்படுத்தியவர்கள் எதிர்க்கட்சிகளே. இவ்வாறான தவறுகள் ஏற்படுகின்றபோது சுட்டிக்காட்ட வேண்டிய கடப்பாடுகள் ஒரு ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சிக்கு உண்டு என்கிற அடிப்படையில் இப்பெறுபேற்றை இரத்துச் செய்யுமாறு கல்வி அதிகாரிகாரிகளிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச கோரிக்கை விட்டிருந்தார். இப்பெறுபேற்றின் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அனைத்துப் பாடங்களுக்குமான விடைத்தாள்கள் மீளத்திருத்தம் செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார். இவ்வாறான தவறுகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தவர்கள் அனைவரும் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, “உயர்தரப் பரீட்சையின் முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் பெறுபேறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்” என அனைத்துப் பல்கலைக்கழக மாணர்களது ஒன்றியம் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அதன் அழைப்பாளர் சஞ்சீவ பண்டார ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கின்றபோது, பாடங்களுக்கான பெறுபேறுகள், மாவட்ட மற்றும் அகில இலங்கை நிலை போன்ற பல்வேறு விடயங்களில் பிழைகள் காணப்படுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றமை அடிப்படையில் இந்த வேண்டுகோளை விடுப்பதாக தெரிவித்திருந்தாலும் மாணவர்களில் எத்தனை வீதமானோர் ஏற்றுக் கொண்டார்கள் என்பது கேள்விக்குறி. இந்த நிலையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சிறப்பான பெறுபேறு கிடைக்காத மாணவர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதி அவர்களே இந்த பிரச்சினையை நீதிமன்றம் வரை கொண்டுசெல்ல முயற்சிப்பார்கள். ஏனெனில் கடந்த காலங்களில் இவ்வாறு பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீதிமன்றம் சென்று நியாயத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டின் உயர்கல்வி அமைச்சர் கௌரவ எஸ்.பி. திசாநாயக்க செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போது; “நாட்டில் செல்வாக்கு மிக்கவர்கள், தங்களது பிள்ளைகளை வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு சேர்ப்பதற்கு எதிர்பார்த்தவர்கள் என பலதரப்பினரின் அழுத்தங்கள் காரணமாகவே க.பொ.த. உயர்தரப்பரீட்சை முடிவுகளை அவசர அவசரமாக வெளியிட்டதாக தெரிவித்திருந்தார். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி நெருங்குவதால் விரைவில் பெறுபேறுகளை வெளியிட வேண்டும் என்பதில் உயர் செல்வாக்குச் செலுத்துவோர் விரும்பியதனால்தான் இந்நிலை என்பதை ஒத்துக்கொண்ட அமைச்சர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட பெறுபேறுகள் சரியானவையே என்றும் எதிர்காலத்தில் இத்தகைய பெறுபேறுக் குளறுபடிகள் இடம்பெறாது என தன்னால் உத்தரவாதப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டது இனிமேலும் தவறுகள் நடைபெறலாம் என்பதை நாசுக்காக கூறியுள்ளாதாகவே கருதவேண்டியுள்ளது. மேலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உயர்கல்வி, மற்றும் கல்வியமைச்சர்களையும், அவர்களின் அதிகாரிகளையும் பல தடவைகள் சந்தித்து வெளியிடுவதில் காணப்பட்ட முட்டுக்கட்டைகளை தவிர்த்து துரிமாக வெளியிடுவதற்கான ஆலோசனைகளை கூறியதாகவும் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
தேசிய ரீதியிலான Z புள்ளி தரவரிசையில் தவறுகள் இல்லை என்று ஒத்துக்கொள்ளும் அமைச்சர் திசாநாயக்க மாவட்ட தரவரிசையிலேயே சில தவறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் மாத்தறை, கொழும்பு மாவட்ட தரவரிசையில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளமை கணனியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே என்றும் தெரிவித்திருந்தார். பெறுபேறுகளை விரைவாக வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக பரீட்சை திணைக்கள அதிகாரிகள் 24 மணிநேரமும் பணிபுரிந்ததாகவும் அவர் கூறுகின்றார்.
என்னதான் காரணம் கூறினாலும் பிழை ஒன்று நடந்திருக்கிறது என்பதே உண்மையாகும். அப்படியானால் இந்தத் தவறு எங்கிருந்து நடந்திருக்கிறது என்பதை மேலே கூறிய விடயங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம் அல்லவா? இதோ வருகிறது. நாளை காலை பத்து மணிக்கு வெளியாகிறது என்றெல்லாம் கூறிவிட்டு இறுதியில் கடந்த 25ஆம் திகதி இரவு 10.30 மணிக்குப் பின்னரே முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன. கல்வியமைச்சு கடந்த 9ஆம் திகதியிலிருந்து வெளியிடுவதில் ஏற்பட்ட இழுபறி இறுதியில் பிரச்சினையில் முடிந்துள்ளமையானது 13 ஆண்டுகள் பாடசாலையில் கல்வி கற்றதன் பிற்பாடு இறுதியில் இவ்வாறானதொரு நிலைமை ஒன்ற ஏற்படுகின்ற நிலையில் எந்த மாணவனுக்கும் ஒரு விரக்தி நிலை தோன்றும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இவற்றுக்கெல்லாம் காரணம் சரியாக தெரியாவிட்டாலும் இன்றைய நவீனயுகத்தில் அனைத்துமே கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதும், துறைசார்ந்த அதிகாரிகளும் பணிபுரியும் அதுவும் நாட்டின் முக்கிய துறையாகிய கல்வித்துறையில் இவ்வாறான ஒரு நிலை காணப்படுவதானது மாணவர்கள் மாத்திரமன்றி நாட்டின் புத்திஜீவிகளையும் சிந்திக்க வைத்துள்ளது என்றே கூறப்படுகின்றது. எனவேதான் இந்தகையப் போக்குகள் மீண்டும் இடம்பெறாதிருக்க அனைத்து நடவடிக்கைகளும் மிகவும் வலுவான முறையில் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த போக்குக்கு காரணமாணவர்களை கண்டறிந்து நாட்டுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டியது கட்டாயமாகும். பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெறுபேற்றிலும் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே மகாஜனங்களின் எதிர்பார்ப்பாகும். இது நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.