Published On: Saturday, December 31, 2011
இந்தியாவில் 'தானே’புயலால் 40 பேர் பலி

'தானே’ புயல் கோரத்தாண்டவத்துக்கு புதுச்சேரி மற்றும் கடலூர் சின்னாபின்னமானது. மிகமோசமாக தாக்கிய புயலுக்கு மொத்தம் 40 பேர் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. நூற்றுக்கணக்கான படகுகள் நொறுங்கின. புதுச்சேரி தெருக்கள் எல்லாம் அலங்கோலமாயின.
நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் புதுச்சேரியில் இருந்து 90 கி.மீ. தொலைவில் நிலை கொண்டு புயல் நகர தொடங்கியது. நேற்று அதிகாலை 4 மணியளவில் புயல் ஆக்ரோஷமடைந்தது. காலை 6 மணியில் இருந்து 7.30 மணி வரை 'தானே தாண்டவம் ஆடியது. பயங்கரமான இரைச்சலுடன் சூறைக் காற்று வீசியது.
தென்னை மரங்கள், மின் கம்பங்கள் தலை திருகினாற்போல் விழுந்தது. கூரை வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. பெரிய விளம்பர நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர்கள் மற்றும் கடைகளின் முன் வைக்கப்பட்டிருந்து பேனர்களும் புயலின் சீற்றத்துக்கு இரையாயின. சுவர்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான கூரை வீடுகள் மீது மரங்கள் விழுந்தது.
மரம், சுவர் இடிந்து விழுந்தது உள்பட புயலுக்கு கடலூரில் 28 பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கான பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், கம்பிகள் சேதமடைந்தன. புயலுக்கு மொத்தம் 40 பேர் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. மின்விநியோகம் சீராக குறைந்தது 15 நாள் ஆகும் என மின்சாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.








