Published On: Wednesday, December 28, 2011
படுத்ததும் உங்களுக்கு தூக்கம் வரவேண்டுமா?

ஆழ்ந்த தூக்கம்தான் ஒரு மனிதனை விழிப்பிற்குப் பின் சுறுசுறுப்பாக்கும். அந்த தூக்கத்திற்காக இன்று தடுமாறுபவர்கள் ஏராளம். படுத்ததும் தூங்கிப்போனால் அது அவருக்கு வரம். தூக்கம் வராமல் கண்ணை பிராண்டினால் அதுவே சாபம்! சிலர் படுத்த நீண்ட நேரத்திற்குப் பின்னரே உறங்குவார்கள். இன்னும் சிலர் எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கமின்றி தவிப்பார்கள். தூக்கம் வரும்போது, நேரம் விடியலை நெருங்கியிருக்கும்.
சிலர் தூக்கம் வருவதற்காக 100ல் இருந்து பின்னோக்கி எண்ணுவார்கள். அவ்வாறு எண்ணும்போது அவர்களது முழுக் கவனமும் எண்களில் கரைந்துவிட சிறிது நேரத்தில் தங்களை மறந்து தூங்கிப் போவார்கள். இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அங்குள்ளவர்களுக்கு தூக்கம் வருவதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆவது தெரிய வந்தது.
ஆழ்ந்த தூக்கத்திற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்கள். மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம். அவர்களில் சிலர் இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பதும் ஆய்வில் தெரிய வந்தது. அதாவது, சீச்சிடும் பறவைகளின் ஒலிகள், மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை அவர்களது தூக்கத்தை எளிதில் வரவழைக்க பயன்படுகின்றனவாம்.
சிலர் மிகப் பழமையான முறையான புத்தகம் படிப்பதையும் தூக்கம் வருவதற்காக பயன்படுத்துகிறார்களாம். இன்னும் சிலர் துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிபோகிறார்களாம். இவை தவிர, கடிகாரத்தின் டிக் டிக் ஓசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம், வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் சப்தமும் இங்கிலாந்துகாரர்களின் தூக்கத்தை வரவழைக்கும் விஷயங்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பதும் ஆய்வில் தெரிய வந்தது.
ஆய்வின் நிறைவாக, அதில் கலந்து கொண்டவர்கள் கூறும்போது, `எங்களது தூக்கம் கெட்டுப் போவதற்கு முக்கிய காரணமே, அருகில் குறட்டைப் போட்டுக்கொண்டு தூங்குபவர்கள்தான்' என்று ஆத்திரமாக வாய் திறந்தார்கள். நீங்களும் தூங்கும்போது குறட்டை இடுபவரா? அப்படியென்றால், உங்கள் அருகில் தூங்குபவர் (அது துணையாக இருந்தாலும்) நிச்சயம் டென்ஷனாகத்தான் இருப்பார். உஷார்!