Published On: Friday, December 09, 2011
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதனை வெளியிடுவதில் காலதாமதம் இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
அமெரிக்கா மீதான செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிட ஐந்து வருடம் பிடிக்கையில் 30 வருட யுத்தத்துடன் தொடர்புடைய அறிக்கை மிகவூம் குறுகிய காலமான வெறும் 3 மாதங்களில் தயாரிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சில தரப்பினருக்கு அதிக அவசரம் காணப்படுகிறது. ஆனால் 1948 முதல் இந்த பிரச்சினை ஆரம்பமாகி 1956 1976 1983 காலப் பகுதியில் நிலைமை மோசமடைந்தது. யுத்தத்தினால் ஒரு இலட்சம் பேர் உயிரிழந்ததோடு நாடும் நாட்டின் பொருளாதாரமும் அழிவடைந்தது. இறுதிக் கட்ட யுத்தத்தின்போது மனித உரிமை விவகாரம் உட்பட பல்வேறு விடயங்களை முன்வைத்து இலங்கை மீது அழுத்தம் மேற்கொள்ள முயற்சி நடத்தப்பட்டது.
ஆனால் நாடு முழுமையாக மீட்கப்பட்டு இடம்பெயர்ந்த மூன்று இலட்சம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். 25 மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட பெரும் பணியை சற்றும் மதிக்காமல் சிறு விடயத்திற்காக மட்டுப்படுத்த முயல்வது குறித்து கவலையடைகிறோம்.
யுத்தம் முடிவடைவதற்கு முன்னமே நல்லிணக்க ஆணைக்குழு அமைக்க ஜனாதிபதி திட்டமிட்டார். அதன் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டு மூன்று வாரங்கள் தான் ஆகிறது. அதனை அவர் முழுமையாக வாசிக்க வேண்டும். இதனை வாசிப்பது மட்டுமன்றி ஜனாதிபதிக்கு நாட்டில் மேலும் நிறைய பணிகள் உள்ளன.
யாருடைய அழுத்தமும் இன்றி நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. எனவே அதற்கு கால எல்லை நிர்ணயிக்க தேவையில்லை.
இந்த விடயத்தை நடுநிலையாகவே பார்க்க வேண்டும். மீண்டும் இவ்வாறான யுத்தம் ஏற்படக்கூடாது என்பதே இந்த நடவடிக்கையில் எடுக்கப்பட்டது. நல்லிணக்க ஆணைக்குழு சரியான சிபார்சுகளை முன்வைத்திருக்கும் என நம்புகிறோம் என்றார்.