Published On: Tuesday, December 27, 2011
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ச்சியடைந்து இந்தாண்டின் மூன்றாவது காலாண்டில் 8.4 சதவீதமாக அதிகரித்துக் காணப்படுவதாக இலங்கை தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடந்தாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதமாக காணப்பட்டது. இந்தாண்டின் ஆரம்பத்திலிருந்து 7.9, 8.2, 8.4 சதவீதம் தொடரான முறையில் அதிகரித்து வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டின் மூன்றாம் காலாண்டில் விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைத்துறை ஆகியன முறையே 6.2, 10.8, 7.8 எனும் அளவினால் வளர்ச்சியடைந்துள்ளது. எனினும் விவசாயத் துறையில் எதிர்ப்பார்த்த வளர்ச்சி கிட்டவில்லை. குறிப்பாக நெல், தேயிலை மற்றும் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் வீழ்ச்சி கண்டுள்ளன.
இதற்கு காலநிலையில் ஏற்பட்ட பாதக நிலையே என்றும் புள்ளி விபரத்திணைக்களம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்தாண்டு முழுவதும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது எட்டு சதவீதத்தை எட்டும் என்று அண்மையில் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்திருந்தார். கடந்த 2008, 2009, 2010ஆண்டுகளில் முறையே 6, 3.5, 8 வீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.