Published On: Friday, January 06, 2012
இலங்கையில் 41 இணையத்தளங்களுக்கு அனுமதி; 20 தளங்கள் தகுதியற்றவை

இலங்கையில் இணையத்தளங்களை பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டுள்ள 41 இணையத்தளங்களுக்கு அடுத்த வாரத்தில் பதிவுச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஊடகத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான தகைமைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவினால் அனுமதிக்கப்பட்ட 41 இணையத்தளங்களுக்கு இவ்வாறு பதிவுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டப்ளியூ.பீ. கணேகல தெரிவித்தார்.
பதிவு செய்யப்படுகின்ற இணையத்தளங்கள் பற்றிய தகவல்கள், அதன் உரிமையாளர்கள், அதில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக ஊடகங்கள் மூலம் வெளியிட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான தகைமைகளை ஆராய்வதற்கான குழுவில் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஒருவரும் தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டதுடன், பதிவுசெய்து கொள்வதற்காக விண்ணப்பித்த 80 இணையத்தளங்களில் 61 இணையத்தளங்கள் நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
டிசெம்பர் மாதம் 23, 28ஆம் திகதிகளில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைகளில் கலந்து கொண்ட 61 இணையத்தளங்களில் 20 பதிவு செய்வதற்கு தகைமை அற்றவையென மேற்படி குழு தீர்மானித்துள்ளதாகவும், அதன்படி மீதமுள்ள 41 இணையத்தளங்களை பதிவுசெய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கணேகல சுட்டிக்காட்டினார். நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய இணையத்தளங்களை உரிய நேரத்திலேயே பரீட்சித்ததாகவும் எனவே, அதன்போது உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டிருந்த இணையத்தளங்கள் அதன்மூலம் இனங்காணப்பட்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அவ்வாறான போலியான தகவல்களை திருத்திக்கொண்டு வருமாறு சில இணையத்தளங்களுக்கு அறிவித்துள்ளதாகவும், இதற்காக கால எல்லை இல்லையெனவும் எச்சந்தர்ப்பத்திலும் தகைமைகளை பரீட்சித்ததன் பின்னர் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கூறினார். இதுவரையில் பதிவுசெய்து கொள்ளாத இணையத்தளங்களுக்கு பதிவு செய்துகொள்ள விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்த கணேகல ஒழுக்க நெறிக்கோவை ஒன்றின் பிரகாரம் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார். போலியான தகவல்களை வெளியிட்டு நபர்களை கஷ்டத்திற்கு உட்படுத்தும் இணையத் தளங்களை தடை செய்வதற்காகவே மேற்படி பதிவு நடவடிக்கையினை அமைச்சு ஆரம்பித்துள்ளது.
அதற்கு எதிராக ஒரு இணையத்தளம் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் அமைச்சின் பணியினை முன்னெடுத்துச் செல்லுமாறு உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது. பதிவுக்கு எதிராக மேலும் 5 இணையத்தளங்கள் மேலும் முறைப்பாடு செய்துள்ளதுடன், அதற்கான தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் அமைச்சு எதிர்பார்த்திருப்பதாகவும் கணேகல மேலும் கூறினார்.