Published On: Tuesday, January 31, 2012
புலமைப் பரிசில் வழிகாட்டி 01
(இங்கு வெளியிடப்படும் விடயங்கள் துருவம் இணையத்தளத்தின் முழுப்பதிப்புரிமை உடையது. இதனை அனுமதியின்றி ஏனைய ஊடகங்களில் பிரசுரிப்பது சட்டவிரோத செயலாகும்)

பாகம் - 01
2012ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதப் போகின்ற மாணவர்களுக்கான கற்றல் வழிகாட்டல் ஆலோசனைகள், பயிற்சிகள், வினாக்கள், ஏனைய விடயங்கள்
உண்மையில் இன்று புலமைப் பரிசில் பரீட்சையானது மிகவும் மதிப்புமிக்கதான ஒரு பரீட்சையாக பார்க்கப்படுகிறது. பாடசாலைகளில் குறிப்பாக பாடசாலையின் கற்றல் அடைவினை மதிப்பிடுகின்ற ஒரு பரீட்சையாகவும், பெற்றோர்களிடையே தன்னுடைய பிள்ளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளான் என்பதை பெருமையாகக் கூறும் நிலைக்கு இப்பரீட்சை பெற்றோர் பரீட்சை என்றும், தாய்மாரின் பரீட்சை என்றும் கூறப்பட்டாலும் இப்பரீட்சைக்காக மாணவர்கள் முண்டியடித்து பாடசாலையிலும், தனியார் வகுப்புக்களிலும் பல ஆயிரங்களைச் செலவு செய்து இறுதியில் குறித்த சில மாணவர்கள் மாத்திரம் உயர் புள்ளியை அடைகின்றனர். ஏனையோர் குறைவான புள்ளிகளைப் பெறுவதன் காரணமாக இவர்களுக்காக கஷ்டப்பட்ட அனைவருக்கும் இது பெரிய அளவில் மனோரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகின்றது.
உண்மையில் இவ்வாறானவர்கள் இப்பரீட்சையிலுள்ள விடயங்களையும், அறிவுறுத்தல்களையும் சரியாக விளங்காததன் காரணமாக இவ்வாறான பாதிப்புக்களை உள்வாங்கிக் கொள்கின்றனர் அண்மைக்காலத்திலிருந்து இப்பரீட்சையின் போக்கானது சற்று வித்தியாசமானதாக அமைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. கடந்தாண்டிலிருந்து சில மாற்றங்களைக் கல்வியமைச்சு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டன அந்தவகையில் புள்ளிகள் 70க்கு மேல் எடுத்த அணைத்து மாணவர்களுக்கும் பரீட்சைத் திணைக்களத்தினால் தாராதரப்பத்திரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தமை யாவரும் தெரிந்த விடயமாகும்.
இருப்பினும் இப்பரீட்சை சம்பந்தமாக சில ஆலோசனைகளை கற்போரும், கற்பிப்போரும், ஆதரவு வழங்குவோரும் அறிந்து கொள்ளவேண்டி உள்ளன. அந்தவகையில் இப்பரீட்சை முறையானது தரம் 5க்கு வந்தவுடன் ஆயத்தங்களை மேற்கொள்வதிலிருந்து மாணவர்களைக் காப்பற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோரைச் சார்ந்தது எனலாம். பரீட்சைக்கு ஆயத்தமாகும் அணைத்து பிள்ளைகளின் வயதும் கணக்கிலெடுக்கப்பட்டே இப்பரீட்சைக்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன.
வினாத்தாள் - I, வினாத்தாள் - II எனப் பிரிக்கப்பட்டு வினாத்தாள் ஒன்றுக்கான நேரம் 45 நிமிடங்களாகவும். பகுதி 11க்கான வினாத்தாள் ஒருமணி 15 நிமிடங்களாகவும் விடையளிப்பதற்கான நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பரீட்சை – Iக்கான வினாப்பத்திரமானது பின்வரும் 14 விடயங்களுக்குள் உள்ளடக்கப்பட்டு மதிப்பிடப்படுகின்றன. இதில் மொத்தமாக 40 வினாக்கள் தரப்படும். இதில் ஒவ்வொரு வினாக்களுக்கும் 3 விடைகள் காணப்படும். தரப்படும் அறிவுறுத்தலுக்கேற்ப விடையைத் தெரிவு செய்தல் வேண்டும். பொதுவாக இவ்வினாப் பத்திரமானது ஆரம்ப வகுப்பக்களில் குறிப்பாக தரம் 3இலிருந்து கற்ற பாடங்களின் அடிப்படையில் அமைந்திருந்தாலும் ஆசிரியருக்கான அறிவுரைப்பு வழிகாட்டி நூலில் தரப்பட்டுள்ள விடயங்களை ஒத்தே காணப்படும். எனவேதான் தான் கற்ற, அறிந்த விடயங்களை பரிசீலனை செய்வதற்காகவும், கற்றல் திறன், ஞாபசக்தி, மனப்பாங்குகளை மேம்படுத்தி வளர்த்துக் கொள்ளவும் இப்பரீட்சைமுறை அமைந்துள்ளது.
அதனால்தான் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆரம்பத்திலிருந்தே பள்ளியில் கற்கின்ற பாடங்களுடன் பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதுடன், அவர்களது நுண்ணறிவு, சிறந்த கற்றல் சூழலில் பழக்கப்படுத்தி சிறியளவான தொடர் பயிற்சிகளில் மூலம் மேம்படுத்துவது சிறப்பாய் அமையும். ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் காணப்படுகின்ற பல்வேறு செயற்பாடுகளையும், திறன்களையும் ஆசிரியர்கள் வழங்குவதுடன், வீட்டுப் பயிற்சிகளையும் ஆரம்பத்திலிருந்தே வழங்கி வரவேண்டும்.
தரம் 5க்கு வந்தவுடன் இலகுவான பயிற்சிகளை மேற்கொள்வதன் ஊடாக பரீட்சைக்கான ஆயத்தங்களை ஒழுங்குபடுத்துவதுடன், மாணவர்களும் ஆரவாரமற்ற முறையில் உளப்பாதிப்புக்குள்ளாகாதவாறு சந்தோஷமான முறையில் தனது கற்றலை மேற்கொள்ள உதவும் ஆற்றலை பெறுவார்கள், பெறுவதற்கான வழிகாட்டலை ஆசிரியர்கள் உதவுதல் அவசியமாகும்.
இதை விட்டுவிட்டு தரம் 5இலிருந்து சுமைக்குமேல் சுமையாக அந்தப் புத்தகம், இந்தப் புத்தகம், அவருடைய வினாத்தாள், இவருடைய வினாத்தாள் என்று ஆசிரியர்களும், அதிபர்களும், பெற்றோரும் போட்டியிட்டு வினாப்பத்திரங்களை வாங்கிக் குவிப்பதில் பணச் செலவுதான் மிச்சம். எனவேதான் மாணவர்களது நலனில் அக்கரைகொண்டு இலகுவிலிருந்து கடினத்தை நோக்கியவாறு படிமுறைக்கமைவாக பாடத்திட்டத்துடன் ஒருங்கிணைந்து மாணவர்கள் பயனடையும் பொருட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கான முறையில் சகல விடயங்களும் தொடராக இவ்விணையத்தளத்தில் தரப்படும்.
இலகுவான முறையில் படிமுறைக்கமைவாக பாடத்திட்டத்துடன் ஒருங்கிணைந்து மாணவர்கள் பயனடையும் பொருட்டு துருவம் இணையத்தளம் உங்களுக்கு வழங்கி வருகின்றது. மாணவர்களாகிய நீங்கள் பாடசாலையில் கற்கின்ற பாட விடயங்களுடன் இதனையும் ஒப்பிட்டு கற்றுக் கொள்வன் ஊடாக சிறந்த புலமையாளர்களாக அடைவீர்கள் என்பதுடன் அதிக அலைச்சல், பணச்செலவு போன்றவற்றைக் குறைத்து வெளிவருகின்ற இதனைத் தொடர்ந்து சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.
(கட்டாயம் அறிவுறுத்தல்களை வாசித்தறிந்த பின்பே பயிற்சிகளை செய்தல் வேண்டும்)
வினாத்தாள் - Iக்கான பின்வரும் விடயங்களை பார்ப்போம்
(1) பிரதியீடு (SUBSTITUTION) : அதாவது ஒரு விடயத்தின் குறியீடு. நிலமை, செயற்றிறன் என்பனவற்றிக்கு மாற்றீடாக வேறொரு விடயத்தின் குறியீடு, நிலைமை செயற்பாட்டுத்திறன் ஆகியவற்றை இனங்கண்டு தெரிவதாகும்.
(தொடரும்...)