Published On: Monday, January 30, 2012
5 வகையான தானியங்களை இலங்கையில் இறக்குமதி செய்யத் தடை

(பஹமுன அஸாம்)
குரக்கன், உளுந்து, எள்ளு, சோளம், நிலக்கடலை ஆகிய ஐந்து வகையான தானியங்கள் இறக்குமதி செய்யப்படுவதை இவ்வருடம் முதல் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் டப்ளியூ.ஏ. சகலசூரிய குறிப்பிட்டார். இந்நடவடிக்கையின் மூலம் பெருந்தொகை அந்நிய செலாவணியை சேமிக்க முடியும் என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பயிர் வகைகளின் உற்பத்தியை தேசிய ரீதியில் உயர்த்துவதற்குத் தேவையான பல திட்டங்கள் தயாரிக்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார். சோளம் பயிர்ச் செய்கை உயர்வடைந்துள்ளதாகவும் உற்பத்தி அதிகரிப்பின் பின்னர் வரியை அதிகரித்து இறக்குமதியை நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் டப்ளியூ.ஏ.சகலசூரிய குறிப்பிட்டார். கடந்த வருடத்தில் கோதுமை மற்றும் தானிய வகைகளின் இறக்குமதிக்காக 29,120 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளதாக 2010ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் மொத்த இறக்குமதியில் இது நூற்றுக்கு ஒன்று தசம் ஒன்பது வீதமாகும். எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தினூடாக நிலக்கடலை மற்றும் உளுந்து ஆகிய தானியங்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் மற்றும் வர்த்தக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தானிய வகைகளுக்கான இறக்குமதி நிறுத்தப்படுவதற்கு முன்னர் அவற்றின் உற்பத்தியின் அதிகரிப்பு எற்படுத்தப்பட வேண்டும் என சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறில்லாத பட்சத்தில் விலை அதிகரிப்பு காரணமாக சிறு கைத்தொழிலில் ஈடுபடுவோருக்கும் கடும் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.