Published On: Thursday, January 26, 2012
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 43 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 43 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களது 6 வள்ளங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பில் புல்மோட்டைக்கு வடக்கே கரையிலிருந்து சுமார் 5 கடல் கிலோ மீற்றர் தேவையில் இவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே நேற்று முன்தினம் மாலை கைதுசெய்யப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய கூறினார்.
இவர்கள் அனைவரும் கடற் றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இவர்களது வள்ளங்களில் பெருந் தொகையான மீன்களும் இருந்தமை சான்றாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களும் 6 வள்ளங்களுடன் திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
தமிழ்நாடு நாகபட்டினம் மாவட்டத்திலுள்ள கீச்சான் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று திருகோணமலை துறைமுக காவல் நிலையத்திடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையின் பின்னர் இன்று திருகோணலை நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.