Published On: Thursday, January 26, 2012
மெகஸின் சிறைச்சாலையில் 45 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதம்

வெலிக்கடை நியூ மெகஸின் சிறைச்சாலையில் நடந்த வன்முறைகளால் 45 இலட்சம் ரூபா வரையும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஏ. திஸாநாயக்க தெரிவித்தார். கைதிகளின் அடாவடித்தனம், தாக்குதல் காரணமாக சிறைச்சாலையின் நூலகம் மற்றும் ஆவணங்கள் வைத்திருக்கும் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது என்று தெரிவித்த செயலாளர் திஸாநாயக்கா, இச்சம்பவத்தை முழுமையாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென மூன்று வெவ்வேறு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அமைச்சு மட்டத்தில் அமைச்சின் மேலதிக செயலாளர் பி.கே. ரவிந்திர தலைமையிலான விசாரணைக் குழுவொன்றும், சிறைச்சாலை மட்டத்தில் சிறைச்சாலை ஆணையாளர் கொடிப்பிலி தலைமையிலான மற்றுமொரு விசாரணைக் குழுவொன்றும், பொலிஸார் மட்டத்தில் விசேட பொலிஸ் விசாரணைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டொரு தினங்களில் முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மேற்படி மூன்று விசாரணைக் குழுக்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மூன்று குழுக்களினதும் அறிக்கை கிடைத்த பின்னரே இத்தாக்குதலுக்கு சூத்திரதாரியாக செயற்பட்ட கைதிகளுக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை சிறைச்சாலையின் ஒழுக்காற்றுக் குழு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
தாக்குதல் இடம்பெற்ற நியூ மெகஸின் சிறைச்சாலை பகுதியின் சேத விபரங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதுடன் தற்போது 45 இலட்சம் ரூபா வரையில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்க் கைதிகள் யாவரும் (181 பேர்) வெலிக்கடை, களுத்துறை உட்பட ஏனைய சிறைகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிந்து நாசமான வழக்கு பிரதிகளுக்கு பதிலாக அவற்றின் பிரதிகளை மீண்டும் எடுத்துவிட முடியும் என்றும் செயலர் ஏ. திஸாநாயக்க கூறினார்.