Published On: Thursday, January 26, 2012
மார்ச் மாதம் முதல் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க ஓய்வூதியம்

மார்ச் மாதம் முதல் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அரசாங்க ஓய்வூதியம் பெறும் நிரந்தர உத்தியோகத்தர்களாக மாற்றப்பட வுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு கூறினார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பேத்தாழை குகனேசன் மண்டபத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அமைச்சர் சந்தித்தார். இதன் போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் அரசாங்க திணைக்களத்தின் கீழ் உள் வாங்கப்படவுள்ளனர்.
இவர்கள் திவிநெகும எனும் திணைக்களத்தின் கீழ் உள்வாங்கப்படவுள்ளனர். அதன் மூலம் இந்த நாட்டிலுள்ள அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களும் நிரந்தர அரசாங்க உத்தியோகத்தர்களாக மாற்றப்படவுள்ளனர். இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் பெறவுள்ளோம். நிந்தர ஓய்வூதியம் பெறும் அரசாங்க உத்தியோகத்தர்களாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மாற்றப்பட்டு அவர்களுக்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் பெறும் அத்தனை சலுகைகளும் வழங்கப்படும்.
திவிநெகும திட்டத்தினூடாக வறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பாடுபட வேண்டும். அதற்காக திறம்பட உழைக்க வேண்டும். இத்திட்டத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வழங்க வேண்டும்.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிரந்தர அரசாங்க உத்தியோகத்தர்களாக மாறும் போது மூன்று வழிவகைகளை பின்பற்ற முடியும். இவ்வளவு காலமும் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக செலுத்தி வந்த 12% ஊழியர் சேமலாப நிதியினை (ஈ.பி.எப்) பெற்றுக் கொள்ள முடியும் அவ்வாறு அவர்கள் அதை பெற்றுக் கொண்டால் அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் புதிய நியமனத்துக்குள்ளாகுவார்கள்.
அவ்வாறில்லாமல் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வழங்கிய 12 வீத ஊழியர் சேமலாப நிதியினை பெறாமல் விட்டால் அவர்கள் ஆரம்ப முதல் அவர்களின் சேவை கணக்கிடப்பட்டு நிரந்தர ஓய்வூதியத்துக்கு உடனடி தகுதிபெறுகின்றனர். அத்தோடு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து நீங்கிக் கொள்ள விரும்பினால் அவர்களுக்கு இரண்டு வருட சம்பளத்துடன் ஊழியர் சேமலாப நிதியும் வழங்கப்படும்.
இவற்றில் ஏதாவது ஒன்றை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பின்பற்ற முடியும். ஆனால் எந்த வொரு சமுர்த்தி உத்தியோகத்தரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு சேவையிலிருந்து விடுபடக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட ஆலோசனையாகும்.
தற்போது சமுர்த்தி உத்தியோகத்தர்களாக இருபவர்கள் அரசாங்க உத்தியோகத்தர்களாக மாற்றப்பட்டால் அனைவருக்குமே இதன் மூலம் சிறந்த எதிர்காலமுண்டு. சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிரந்தரமாக்கப்பட்டவுடன் அவர்களுக்கான வீட்டுக்கடன் வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் வழங்கப்படும்.
இவ்வளவு காலமும் வழங்கப்படாமலிருந்த அனைத்து பதவி உயர்வுகளும் நிரந்தரமாக்கப்பட்டவுடன் வழங்கப்படும். தற்போது சமுர்த்தி உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இம்மாத சம்பளத்துடன் வழங்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.