Published On: Monday, January 23, 2012
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்
(நிஸார் ஜமால்தீன்)
அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இவ்வைபவத்தில் காங்கிரஸின் தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் தவிசாளருமான ஏ.எல்.எம். அதாஉல்லா (பா.உ), கிழக்கு மாகாண பதில் முதலமைச்சரும் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல். துல்கர் நஹீம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.எம். நஸீர், அம்பாரை மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அன்வர்தீன், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா உட்பட அம்பாரை மாவட்ட திணைக்களத் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின்போது அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட 32 மில்லியன் நிதியினை அட்டாளைச்சேனையின் அனைத்து கிராமசேவகர் பிரிவுகளும் நன்மையடையுமாறு அமைச்சர் அதாஉல்லாவினால் பங்கீடு செய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டு கமநெகும திட்டத்தின்மூலம் வழங்கப்பட்ட நிதிகளினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி ஆகிய பிரதேசங்களில் காணப்படும் டு.சு.ஊ அரச காணிகளை சட்டவிரோதமாக பிடித்துவைத்திருப்பவர்களை இனங்கண்டு அக்காணிகளை பொதுமக்களின் தேவைக்காக மீட்டெடுக்க பணிப்புரை வழங்கியதுடன் அதற்கான விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா நிதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கமநெகும திட்டத்தின்மூலம் வழங்கப்பட்டது.