Published On: Monday, January 23, 2012
கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

(யு.கே.காலித்தீன்)
கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கம் இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில் நடாத்திய கிழக்கு மாகாண எப்.ஐ.எம்.ஏ. பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கல்முனை வை.எப்.சி. உள்ளக அரங்கில் நேற்றிரவு இடம்பெற்றது. இச்சுற்றுப் போட்டியில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகள்; கழகங்கள் பங்குபற்றின.
இச்சுற்றுப் போட்டியின் தவிசாளரும் உப தலைவருமான எம்.எச்.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவர் எம்.ஐ.எம்.மர்சூக் மற்றும் ஆர்.எம்.பி. பிரியந்த, பொதுச் செயலாளர் அலியார் பைஸர், சுற்றுப் போட்டியின் செயலாளர் ஏ.எம்.அன்சார், ஓய்வுபெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஏ. நபார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, 18 வயதுக்குட்பட்ட ஒற்றையர் திறந்த போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் எம்.எச்.எம்.முஸ்தன்ஸீர் சம்பியனாகவும் , நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை மாணவன் ஏ.எம்.இப்ஹாம் இரண்டாவது இடத்தையும், கல்லாறு மத்திய கல்லூரியின் மாணவன் கே.லக்ஸ்மன் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை, 18 வயதுக்கு மேற்பட்ட இரட்டையர் ஆட்டத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் மாணவர்களான எம்.எச்.எம். முஸ்தன்ஸீர், எஸ்.ஏ.றஸீம் ஆகியோர் சம்பியன்களாகவும், அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான ஐ.ரீ.எம்.ஹஸன், ஏ.எம்.றிஸான் ஆகியோர் இரண்டாம் இடத்தினையும், சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டு கழகத்தின் எம்.ஜே.எம்.ஜே. இஸ்கி, எம்.எம்.எம்.இஹ்ஸான் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
18 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி சம்பியன்களாகவும், கல்லாறு மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தையும், சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டு கழகம் மூன்றாம் இடத்தையும், 18 வயதுக்கு மேற்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் மட்டக்களப்பு ஆசியன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகவும், சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தையும், கல்லாறு பெட்மின்டன் கழகம் மூன்றாம் இடத்தையும், தனி ஒற்றையர் திறந்த போட்டியில் மட்டக்களப்பு ஏசியன் விளையாட்டுக்கழத்தைச் சேர்ந்த கே. சட்குணசீலன் சம்பியனாகவும், அதே கழகத்தைச் சேர்ந்த எஸ்.கோவராஜா இரண்டாவது இடத்தினையும் , வை.எப்.சி. கழகத்தைச் சேர்ந்த வி.வினோத் குமார் மூன்றாவது இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.
இரட்டையர் திறந்த போட்டியில் மட்டக்களப்பு ஏசியன் விளையாட்டு கழகத்தின் கே.சட்குணசீலன், எம்.கே.எம்.சியான் ஆகியோர் சம்பியன்களாகவும், கல்முனை கோல்ட் விளையாட்டுக் கழகத்தின் யு.எல்.எம்.இர்ஸான், எஸ்.ஐ.எம்.ஜெகன் ஆகியோர் இரண்டாம் இடத்தையும், நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் ஏ.எம்.எம்.றஜீப், யு.எல்.ஸாஹிர் அஹமட் ஆகியோர் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.



