Published On: Monday, January 23, 2012
சம்புநகர் மீள்குடியேற்ற கிராமத்திற்கு மின்சாரம் வழங்க 2 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு
(அமைச்சரின் ஊடகப்பிரிவு)
அட்டாளைச்சேனை சம்புநகர் மீள்குடியேற்ற கிராமத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்புநகர் பல்தேவைக் கட்டடத்தில் கிழக்கு மாகாண பதில் முதலமைச்சரும் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, கிராமிய மின்சார அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்றது.
இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஐ. சலாஹுதீன் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பயங்கரவாதம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு பல வருடங்கள் கடந்தபோதிலும் கடந்த 15 வருடங்களாக இருளில் வாழ்ந்துவருகின்றனர். இதனால் இம்மக்கள் பல இன்னல்களை எதிர்கொள்வதோடு மாணவர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். இக்கிராமத்தில் அங்கவீனர் வீட்டுத்திட்டமும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர்.
கிழக்கு மாகாண கிராமிய மின்சார அமைச்சரும் பதில் முதலமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.