Published On: Thursday, January 12, 2012
பிளாஸ்டிக் கூடை விவகாரம் களோபரத்தை ஏற்படுத்துமா?

(எஸ்.எல். மன்சூர்)
அண்மைக்காலமாக இலங்கை அரசியலில் எதிரான வாதங்களும், அரசியல் பிரச்சினை களும் தலைதூக்கியுள்ள நிலையில் மரக்கறி மற்றும் பழவகைகளை கொண்டுசெல்வதற்காக பயன்படுத்தப்பட வேண்டுமெனப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கூடை பிரச்சினை சற்று ஓய்ந்திருந்தாலும் மீண்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு அமுல்படுத்தப்பட விருக்கின்ற நிலையில் பிளாஸ்டிக் விவகாரம் மீண்டுமொரு களோபரத்தை ஏற்படுத்துமா? என மக்கள் மத்தியில் விவாதத்திற்கு வருகின்றது. அரசு மக்களின் நன்மைகருதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்படுகின்ற வேளைகளில் பிரச்சினைகள் தலைதூக்குகின்ற ஒருநிலை அண்மைக்காலமாக அரங்கேற்றப்பட்டு வருகின்றது. அரசும், அதிகாரிகளும் செய்வதறியாது திகைக்கின்றபோது நாட்டின் ஜனாதிபதி தலையிட்டு தீர்க்க வேண்டிய நிலமையும் காணப்படுகிறது.
நாட்டில் புரையோடிப்போன யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த அரசு, மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களையும், நவீன இலங்கையைக் கட்டியெழுப்பும் மகிந்த சிந்தனையின் கருவூலம் ஆச்சரியமிக்க இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு அமைய நாட்டின் சகல துறைகளும் அபிவிருத்தியை மேற்கொண்டுவரும் அரசின் புதிய திட்டமாக மரக்கறிவகைகளைக் கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடை அவசியமாகும் என்று உரிய அமைச்சு தெரியபடுத்த எழுந்தது பிரச்சினை இறுதியில் மறக்கறிவகைகள் அனைத்தும் வீதிக்கு வந்து, சிலநாட்கள் வீதி மறியல் என்றும், இறுதியில் மக்களுக்கு உண்பதற்கு மறக்கறி விலையேற்றம், உற்பத்தியாளர்கள் திண்டாட்டம் இறுதியில் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்து ஆளுக்கொருபக்கம் விடாப்பிடியாக இருந்தமைகண்டு பிளாஸ்டிக்கூடையில் மரக்கறிகள் கொண்டு செல்வது பிற்படுத்தப்பட்டது. ஓய்ந்தது பிரச்சினை.
இதற்கிடையில் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் செட்டி என்பதுபோல வழமைபோன்று வெளியாக இருந்த உயர்தரப்பரீட்சை விடயம் அரசையே ஆட்டம்காண வைத்து இறுதியில் மேலே கூறப்பட்டதுபோல ஜனாதிபதியின் தலையீட்டுடன் பிரச்சினைகள் ஓரளவுக்கு ஓய்ந்தது. அடிக்கடி கொழும்பில் மாணவர்களின் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுவதால் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்ற நிலைக்குள்ளாகின்ற ஒருபோக்கு காணப்படுகின்றது.
மக்களின் அபிலாசைகைள மேம்படுத்த எத்தனிக்கின்றபோது ஒருசிறிய விடயத்தை பெரிதாக்கி உடைந்துபோன அரசியல் வாதிகளின் ஏவல்களும் இவற்றில் இல்லாமலில்லை. சில அரசியல்வாதிகளுக்கு பிரச்சினைகள் இல்லாமலே இருக்கக்கூடாது அவ்வாறானவர்கள் எதிலுமே குறையைத்தான் காண்பார்கள். மக்களின் வாழ்க்கையில் உயர்ச்சியை ஏற்படுத்துமா? மக்கள் ஆதரவாக இருப்பார்களா? என்பதையெல்லாம் விலாவாரியாக ஆராய்ந்தபிற்பாடு செயற்திட்டங்களை மேற்கொள்கின்றபோது பல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம் என்பது அறிஞர்களது அபிப்பிராயமாகும்.
இவ்வாறான பலபிரச்சினைகள் மேலெழுந்த நிலமையில்தான் பிளாஸ்டிக்கூடை விவகாரமும் கடந்த மாதத்தில் அரசுக்கு பாரிய தலையிடியை எதிர்நோக்கி இருந்தது. நாட்டை ஆளுகின்ற அரசு அதன் அபிவிருத்திப் பாதையில் ஒவ்வொரு துறைகளும் நவீனத்துவமிக்கதாக அமைக்கப்பட வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லைதானே. அண்மையில்கூட உயர்கல்வி அமைச்சரின் தனியார் பல்கலைக்கழக அமைவுக்கு பாரிய எதிர்ப்பலைகள் கிளம்பின. ஆனால் எந்த எதிர்ப்பு வந்தாலும் அமைத்தே தீருவேன் என உயர்கல்வி அமைச்சர் கௌரவ எஸ்.பி. திசாநாயக்கா கூற, அவ்வாறு அமைத்தால் அதனை முழுமையாக எதிர்ப்போம் என்றனர் மாணவர்கள். இது பிரச்சினை வேறு.
உண்மையில் அரசின் கடந்தகால ஆய்வின் பிரகாரம் சுமார் 25 வீதம் தொடக்கம் 40 வீதம் வரை பைகளில் அல்லது சாக்குகளில் ஏற்றிச் செல்லும் மரக்கறி வகைகள், பழவகைகள் போன்றன பழுதடைவதாகவும் இவ்வாறாக பழுதடைகின்றவற்றின் பெறுமதியோ வருடமொன்றுக்கு சுமார் 20 மில்லியன் ரூபாவரை நஷ்டம் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கவும், ஒழுங்கான முறையில் அடுக்கப்பட்டு அவை பழுதடையாகா வண்ணம் வாடிக்கையாளரை சென்றடைவதற்கான ஒருசிறப்பான திட்டத்தை வகுத்துத்தான் இந்த பிளாஸ்டிக் கூடை அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த பல மாதங்களுக்கு முன்னர் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் அறிவித்திருந்தது அரசு. மேலும் அவ்வாறான கூடைகளை குறைந்த விலைக்கும், தவனையடிப்படையிலும் வழங்கவும் முடிவாக்கிய நிலையில் தற்போது விவசாயிகளும், வியாபாரிகளும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு மரக்கறி விற்பனையில் பாரியதாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
அப்போது வியாபாரிகள் கூறிய காரணங்களாக அதிக பாரம், அதிகசெலவு, அதிக இடத்தைப் பிடிக்கிறது என்றெல்லாம் கூறினர். அதனை இலகுவாக பைகளில், சாக்குகளில் அடைக்கின்றபோது அதனை இலகுவாக ஏற்ற இறக்கவும், இடைவெளிவிடாமல் லொறிகளில் அடுக்கவும், அதிகமாக ஏற்றிக் கொண்டுசெல்லவும் முடிகிறதாம். மேலும் இப்பைகள், சாக்குகளுக்கு பெரியளவில் விலைகளும் இல்லை. பிளாஸ்டிக் கூடைகளை விலைகொடுத்து வாங்குகின்றபோது அவை மரக்கறி மற்றும் பழங்களின் விலைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தி சாதாரண பொதுமக்களுக்கு கஷ்டத்தை, அதிக சுமையையும் ஏற்படுத்தி விடுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காகவே வியாபாரிகளாகிய நாம் போராட்டம் நடாத்தினோம் என்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர் கொழும்பு மெனிங் சந்தை வியாபாரிகள். இதுபோன்று தம்புள்ள, பண்டாரவல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் இதனையே கூறினர்.
யார் என்ன சொன்னாலும் சட்டம் சட்டம்தான் என்று அடித்துக் கூறினார் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ. குறிப்பாக அமைச்சர் அவர்கள் ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவராக இருந்து ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பக்கம் மாறியவர். இவரது அதிரடி நடவடிக்கைகள் விவசாயிகளையும், வியாபாரிகளையும் தாக்கத்திற்குள்ளாக்கியுள்ளதா? அல்லது வேண்டுமென்றே பிரச்சினையை உருவாக்க முற்படுகின்றார்களா? என்பதும் கேள்விக்குறி. அமைச்சரின் மரக்கறி மற்றும் பழவகை பாதுகாப்புத் திட்டமானது உண்மையில் பொதுமக்களுக்கு பழுதடையாதவாறு கிடைக்க வகை செய்யும் திட்டமாகக் காணப்பட்டாலும் விவசாயிகளும், வியாபாரிகளும் கூறுகின்ற காரணங்களிலும் நியாயங்கள் இல்லாமலும் இல்லை.
பொதுவாக இவ்வாறான விடயங்களை அரசு மேற்கொள்கின்றபோது இதனுடன் சம்பந்தப்பட்ட அமைப்பு, நிறுவனம், நபர்களுடன் ஆய்ந்தறிந்து மேற்கொண்டிருக்க வேண்டும் என்கின்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவ்வாறு கலந்தாலோசனை செய்யும் அளவுக்கு விடயம் பெரிதாக ஒன்றுமில்லை என்பதையும் அவதானிக்கக்கூடியதாகவும் உள்ளது. ஆனால் அமைச்சர் இதில் விடாப்பிடியாக இருக்க முயற்சிக்கவில்லை என்றே பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து மரக்கறி மற்றும் பழவகைகள் பிளாஸ்டிக் கூடைகளில் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என்கிற கட்டாயம் அமுலில் இருந்தாலும் விட்டுப்பிடிப்போம் என்று ஒன்பது மாதங்களுக்கும் மேலாக அமைச்சும் சட்டமும் இதனை சட்டப்படிக் கவனிக்காது வந்துள்ள நிலையில் கடந்த டிசம்பர் 11ஆம் திகதி நள்ளிரவிலிருந்து கட்டாயம் அமுல்படுத்தப்பட்டதுதான் தாமதம் வியாபாரிகள் வழமைபோன்று பொலிசார் எதையும் செய்யமாட்டார்கள் எம்மை விட்டுவிடுவார்கள் என்றெண்ணி லொறிகள் பொருளாதார மத்திய நிலையங்களையும், சந்தைகளையும் நோக்கிச் சென்றபோது நள்ளிரவு நேரத்திலிருந்தே லொறிகளும் அதனுடன் காணப்பட்ட மரக்கறி மற்றும் பழவகைகளும் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.
அதேவேளை அன்று (13.12.2011) பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்காவும் மரக்கறி மற்றும் பழங்கள் லொறிகளில் ஏற்றிச் செல்கின்றபோது பிளாஸ்டிக் கூடைகளில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று அரசின் அறிவிப்பும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் ஆர்ப்பாட்டம் போன்ற விடயங்களில் அரசு சரியான தீர்மானத்தை எடுக்க முன்வரவேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார். இவ்விடயத்திற்கு அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ பிளாஸ்டிக் திட்டம் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது என்றும், அதேவேளை சிறிய லேன்மாஸ்டர் மற்றும் முச்சக்கர வண்டிகளில் ஏற்றப்படுகின்ற மரக்கறி மற்றும் பழவகைகளுக்கு இந்த பிளாஸ்டிக் கூடைகள் அவசியம் இல்லை என்கிற ஆறுதலையும் கூறிய சமாளித்தார் அமைச்சர்.
இந்நிலையில் மீண்டும் பிளாஸ்டிக் கூடை இம்மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. அரசினால் மேற்கொள்ளப்படவிருக்கின்ற நிலையில் விஸ்பரூபம் பெற்று களோபரத்தில் முடிவுற்றால் நஷ்டம் அடையப்போவது பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும்தான். ஏனெனில் மரக்கறிவகைகள் ஏற்றுவது தடைப்பட்டால் உற்பத்தி தடைப்படும். பொதுமக்களுக்கு மரக்கறி கிடைக்காது வியாபாரிகள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விலையைக் அதிகரிக்கப்பார்ப்பார்கள். எது எப்படியோ அமைச்சரும், வியாபாரிகளும், உற்பத்தியாளர்களும் ஒரே இடத்திலிருந்து பேசி இத்திட்டத்தினால் ஏற்படவிருக்கின்ற பிரச்சினைகளை எடுத்துக்கூறி சரியான தீர்மானத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
தற்போது பலமட்டங்களில் ஆர்ப்பாட்டங்களும், வீதி மறிப்புக்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இது மக்களை பாதிக்கவைக்கும் என்பதை ஆர்ப்பாட்டம் நடாத்துபவர்கள் கண்டுகொள்வதேயில்லை. அரசியலில் அனைத்தும் சகஜம் என எடுத்துக் கொண்டாலும் கஷ்டம் மக்களுக்கே. மக்களுக்கு நன்மை செய்யப்போய் அதுவே வம்பில் முடிவடைய விடக்கூடாது. எனவேதான், மீண்டும் பிளாஸ்டிக்கூடை விவகாரத்தை சரியான முறையில் கையாண்டு யாரையும் பாதிக்காத வண்ணம் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகும். பொறுத்திருந்து பார்ப்போம்.