Published On: Thursday, January 12, 2012
வடக்கில் அடுத்த மாதம் முதல் சமுர்த்தி கொடுப்பனவு

வடபகுதி மக்களுக்கு அடுத்த மாதம் முதல் சமுர்த்தி கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 395 கிராமசேவகர் பிரிவிலுள்ள சுமார் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு இவ்வாறு சமுர்த்தி கொடுப்பனவு வழங்க உள்ளதோடு தகுதியானவர்களை அடையாளங் காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென. பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கில் சமுர்த்தி திட்டம் பூரணமாக அமுல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவிலும் முன்னெடுக்கப்படும்.
தற்பொழுது நாடுபூராவும் சுமார் 15 இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டில் 24 வீதமாக இருந்த வறுமை வீதம் 2011இல் 7.5 வீதமாக குறைந்துள்ளது. 2016 ல் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளோர் வீதம் 3 ஆக குறைப்பதே தமது இலக்காகும். மொத்த சனத்தொகையில் 4 வீதமானவர்களுக்கே சமுர்த்தி வழங்கப்படுகிறது. வட பகுதியில் சமுர்த்தி திட்டத்தை விஸ்தரிக்கும் அதேவேளை அங்கு 28 சமுர்த்தி வங்கிகளும் ஆரம்பிக்கப்படும்.
‘திவிநெகும’ திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மனைப் பொருளாதாரத் திட்டத்தை மேம்படுத்தவும் மரக்கறி, பழவகை பயிரிட உதவவும் திட்டமிட்டுள்ளோம். இந்த வருடத்தில் வட பகுதியில் கடலை, சோளம், மிளகாய், தெங்கு பயிர்ச் செய்கைகளை பிரபலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வருடத்தில் சமுர்த்தி கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வருமானம் பெறுபவர்களும் சமுர்த்தி உதவி பெறுகின்றனர். அவர்களாக விரும்பி இதிலிருந்து ஒதுங்க வேண்டும் என்றார்.