Published On: Thursday, January 12, 2012
ஆசிரிய உதவியாளர்களின் இடமாற்றங்கள் அநீதியான செயலாகும்

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளில் பயிற்சி பெற்று 2012 ஜனவரி மாதம் 15ஆம் திகதி வெளியாகும் ஆசிரியர் உதவியாளர்களை வெளி மாவட்டங்களுக்கும், வெளி வலயங்களுக்கும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அநீதியான செயலாகும் என சமூக மேம்பாட்டு அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் ஏ.எம். ஜஹான் ஒப்பிமிட்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவிற்கு மகஜரொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மஜரில் மேலும், இவ்வாசிரிய உதவியாளர்கள் கடந்த 4 வருடங்களாக ரூபா. 3000.00 கொடுப்பவை மட்டுமே பெற்று வருகின்றனர். வாழ்க்கைச் செலவு மலைபோல் ஏறியுள்ள இக்காலகட்டத்தில் இக்குடும்பங்கள் மற்றும் தங்கி வாழ்பவர்களுடன் இக்கொடுப்பனவை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்க்கை நடாத்துவது முடியாத காரியமாகவுள்ள நிலையில் அம்பாறை – மட்டக்களப்பு மாவட்டங்களில் கடமையாற்றிய ஆசிரிய உதவியாளர்களை திருகோணமலை மாவட்டத்திற்கும், பொத்துவில் போன்ற தூர இடங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதானது வேதனையளிக்கும் விடயமாகும்.
இவர்களுக்கு வழங்கப்படும் ரூபா 3000.00 கொடுப்பனவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு போக்குவரத்து செய்யக்கூட போதுமானதாக இல்லை. இவர்களுக்கான இறுதிப்பரீட்சை இன்று புதன் கிழமையே முடைவடைந்துள்ளது. இவர்களது பரீட்சைப் பெறுபேறுகளின் படி சித்தியடைந்தால் மாத்திரமே இவர்கள் ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்பட்டு ஆசியர்களுக்குரிய சம்பளங்களைப் பெறக்கூடியதாக இருக்கும். இதற்கு முன்னரே உடனடியாக இம்மாதம் 16ஆம் திகதி தொடக்கம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே இடமாற்றக் கடிதங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதால் ஆசிரிய உதவியாளர்கள் மிகுந்த மன உழைச்சலுக்குள்ளாகி பரீட்சையைக்கூட திருப்திகரமாக எழுது முடியாது கஷ்டப்பட்டுள்ளனர்.
எனவே, இவ்வாறான ஆசிரிய உதவியாளர்களின் இடமாற்றங்களை இரத்துச் செய்து ஏற்கனவே அவர்கள் கற்பித்த பாடசாலைகளில் தொடர்ந்தும் கற்பிப்பதற்கு அனுமதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.