Published On: Wednesday, January 18, 2012
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 192 ரன்னுக்கு சுருண்டது

பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 192 ரன்னுக்கு சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். பாகிஸ்தான் & இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட், துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. சயீத் அஜ்மலின் சுழலில் சிக்கித் திணறிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
ஒரு கட்டத்தில் 94 ரன்னுக்கு 7 விக்கெட் (42.1 ஓவர்) இழந்து திணறிய இங்கிலாந்து அணியை, பிரையர் & ஸ்வான் ஜோடியின் பொறுப்பான ஆட்டம் கவுரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ஸ்டிராஸ் 19, டிராட் 17, மார்கன் 24, ஸ்வான் 34, ஆண்டர்சன் 12 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய மேட் பிரையர் 70 ரன் எடுத்து (154 பந்து, 3 பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் சயீத் அஜ்மல் 7 விக்கெட் கைப்பற்றினார் (24.3&7&55&7). சீமா, ஹபீஸ், ரகுமான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்துள்ளது.