Published On: Wednesday, January 18, 2012
60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட அடையாள அட்டை

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு அவர்களின் இரத்த வகை, நோய் உட்பட சகல தரவுகளும் உள்ளடங்கிய சிப் உடன் கூடிய அடையாள அட்டையை வழங்க திட்டமிட்டுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா நேற்று செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் 16 இலட்சத்து 61 ஆயிரம் பேர் வாழ்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
வாய்மூல விடைக்காக சஜித் பிரேமதாஸ எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, சிரேஷ்ட பிரஜைகள் தொடர்பில் 2003/4 ஆம் ஆண்டிலே தொகை மதிப்பீடு செய்யப்பட்டது. புள்ளி விபரவியல் திணைக்கள தரவுகளின் படி 60-70 வயது வரையானவர்கள் 9,36,804 பேரும் 70-80 வயது வரையானவர்கள் 5,36,503 பேரும் 80-90 வயதானவர்கள் 1,66,100 பேரும் 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் 21,593 பேரும் உள்ளனர்.
சிரேஷ்ட பிரஜைகளில் 8,52,253 பேருக்கு விசேட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மேலும் பல நிவாரணங்கள், உதவிகள் வழங்க உள்ளோம். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரம் வெளியிட முடியும் என்றார்.