Published On: Saturday, January 07, 2012
புதிய கல்விச் சீர்திருத்தம் பயன்பாட்டில் இருக்கின்றதா?

எஸ்.எல். மன்சூர் (கல்விமானி)
கடந்த 1997 இல் கொண்டுவரப்பட்ட ஆரம்பக்கல்வி சீர்திருத்தத்தின் நோக்குக்கு மாற்றமாகவே இப்பரீட்சையின் முடிவுகள் உணரப்படுகின்றன என்பதைத்தான் பலரும் கூறுகின்றனர். அப்போது ஏற்பட்ட பல மாற்றங்கள் தவறுகள் காரணமாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 2003இல் தேசிய கல்வி ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மனித விருத்தி பற்றிய தொலைநோக்கை அடைந்து கொள்வதற்காக தேர்ச்சி மைய, பாடத்திட்ட விருத்திப் பிரவேசத்தின் போது மொழிப்பாடவாரியான தேர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்துடன் பொதுத்தேர்ச்சிக் குறிக்கோள்களை அடைவதற்கு மாணவர்கள் எய்த வேண்டிய அடிப்படைத் தேர்ச்சிகளையும் விதந்துரைத்துள்ளது. அதாவது தொடர்பாடல் தேர்ச்சிகள், ஆளுமை விருத்தி தொடர்பான தேர்ச்சிகள், சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகளுக்கான தேர்ச்சிகள், வேலை உலகிற்கு தயார்படுத்தலுக்கான தேர்ச்சிகள், சமயமும் ஒழுகலாறும் தொடர்பான தேர்ச்சிகளும், ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தல், விளையாட்டுப் பற்றிய தேர்ச்சிகள், கற்றலுக்கான கற்றல் தொடர்பான தேர்ச்சிகள் ஆகியன விருத்தியடைந்து செல்லும் விதமாகக் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் அமைதல் சிறப்பானது என்பதைத்தான் இவ்வயது மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றது.
ஆனால் இது நடைபெறுகின்றதா? என்றுபார்த்தால் வித்தியாசமான ஒரு போக்கைத்தான் இந்த புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புகளுக்கு தயார் செய்யப்படுகின்ற மாணவர்கள் நோக்கப்படுகின்றனர். எனவேதான் இப்படியான உளரீதியான தாக்கங்களுக்கு உள்ளாக்கப்படுகின்ற பரீட்சைக்கு குறைந்த புள்ளிகள் 70க்கு மேல் எடுத்த அனைவருக்கும் கல்வியமைச்சினால் தராதரம் வழங்கப்படும் என்கிற உத்தரவாதத்தையும் மீறி குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்களின் நலனை கவனிக்கும் அதேவேளை குறைவாக எடுத்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிப்பது அவர்களது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் ஆற்றலை வழங்கும் என்பதைத்தான் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாது ஆரம்ப வகுப்புக்களில் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணியை மாணவர்களுக்கு ஒழுங்கு செய்து கொள்வதுடன், இவர்கள் பிள்ளைவிருத்திப் பருவத்தின் தீர்க்கமான ஒரு கட்டத்தில் காணப்படுவதால் அவர்களிடம் ஆக்கச்சிந்தனையையும், சமூகத்திறன்களும், ஆளுமைப்பண்புகளும் விருத்தியடைந்து இசைவடையும். ஆதலால் பாடசாலைப்பருவத்தில் மாணவர்கள் கற்றலுக்காக சூழலுடன் இடைத் தொழிற்பாடுகளை நடத்துவது மிக முக்கியமாகும். அதற்காகவேண்டியே ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி ஆசிரியர்களுக் வழங்கப்படுகிறது. அதனை முற்று முழுதாக வாசித்தறிந்து அவற்றிலுள்ள விடயங்களை சூழலுடன் இயைபாக்கி கற்றலை மேற்கொள்கின்றபோது இலகுவாகவே மாணவர்கள் கற்றலின்பால் ஈடுபாடுடையவர்களாக தோற்றம் பெறுவார்கள். இம்முறை பரீட்சைக்கு உள்வாங்கப்பட்ட பல வினாக்கள் நேரடியாக பாடத்திட்டத்திற்குள் உட்பட்டவாறே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பாடசாலையின் ஆசிரியர் இதனை அழுத்தமாக பிரயோகிக்காமல் சாதாரணமாக கற்பிக்கின்றபோது இலகுவாக மாணவர்களினதும், பெற்றோர்களினதும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
இதனை மையமாகக் கொண்டே பரீட்சை முடிவுகள் வெளியான கையுடன் தேசிய பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. “வெற்றி பெற்றவர்கள் ஆனந்தக்களிப்பு, கற்பித்த ஆசிரியர் தொடக்கம் உறவினர்கள் வீடுவரை இனிப்புப்பண்டம் வழங்குதல், சித்தியடைந்த மாணவர்களின் கட்அவுட் காட்சிப்படுத்துதல், பத்திரிகையில் மாணவர்களின் போட்டோ இவ்வாறு பெற்றோர் ஆசிரியர் படாதபாடு படுத்துகின்றனர். இன்னொருபுறம் குறைவாக புள்ளி பெற்ற மாணவர்களை கவனியாது விடுகின்றனர். அவனது மனவேதனை அவனது உளப்பாதிப்பினால் விளையப்போகும் எதிர்காலத்தாக்கங்கள் குறித்து கல்விச் சமுதாயம் கவனம் கொள்ளத் தவறிவிடுகிறது.
அத்துடன் தன்னை முற்றாக புறந்தள்ளிவிட்டார்கள் என்கிற மனவேதனையில் அப்பிஞ்சு உள்ளத்தின் குமுறலையும் நாம் கவனிக்கவேண்டும். விளையாட்டை மறந்து சதா கற்றல் என்ற நிலையில் புள்ளிகள் குறைவான காரணத்தினால் ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள், உற்றார் உறவினர் ஏன் அதிபர்கூட இவனை நச்சரிப்பதனால் மொத்தத்தில் குழந்தைப் பருவத்தையே மறந்து விடுகின்றான். அத்துடன் புலமைப் பரீட்சையின் பின்னர் பெற்றோர்கள் பலர் உளமருத்துவரிடம் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்கின்ற ஒருநிலைக்கு இப்பரீட்சை அமையுமானால் எதிர்கால புத்திஜீவிகளை எங்கே தேடுவது. ஆதலால்தான் இப்பரீட்சை தேவையான ஒன்றா என்பதை சிந்தித்துப்பார்க்கின்ற கடப்பாடு அனைவருக்கும் உண்டு” என்கிற கருத்தை தெளிவுபடுத்தி விரிவாக எழுதப்பட்டிருந்தது.
உண்மையில் ஆய்ந்து அறிந்து பார்க்கின்றபோது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இத்தகைய புலமைப்பரிசில் பரீட்சையினால் தாக்குண்ட பிள்ளைகளைப் பற்றிய அறிக்கை ஒன்றில் இவ்வாறு காணப்படுகிறது. இப்பரீட்சை எழுதிய பிள்ளைகள் பலர் பல்வேறு நோய்களுக்குள்ளாகி வைத்திய உதவியை நாடுகின்றனர். அதிகமான மாணவர்களிடம் இந்தநோய்கள் பரீட்சைக்குத் தயாராகும் போதும், பரீட்சையின் பின்னரும் ஏற்பட்டவை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. இப்பரீட்சை காரணமாக இப்பிள்ளை அனுபவித்து வரும் மன அழுத்தக்காரணிகளை மதிப்பீடு செய்தபோது தலைவலி, பார்வை மங்குதல், தலை சுற்றல், நாற்பட்ட வயி;ற்றுவலி, மூட்டு வலி, தசை வலி, மூர்ச்சையடைத்தல், வலிப்பு, மூச்சுத் திணறல், தூக்கமின்மை போன்ற மனவேதனைகளை இப்பருவத்தின் பிள்ளைகளுக்கு இப்பரீட்சை முடிவுகளும், ஆரம்பமும் ஏற்படுத்திவிடுகின்றன. என்கிற விடயத்தை ஆய்வுகள் தொட்டிக்காட்டி நிற்கின்றன.
அதேவேளை கற்ற பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து பல அண்பளிப்புக்கள் பெறப்பட்டு மாணவர்களின் பெற்றோர்களால் பாராட்டுப் பெறவைக்கின்ற முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் குறைவான புள்ளிகள் பெற்ற மாணவர்களையும் இணைத்து பாடசாலைகள் போட்டி குரோத மனப்பாண்மையை விடுத்து பாடசாலைக்கு பெயரைப் பெற்றுத்தந்த மாணவர்களை பாடசாலை சமுதாயமே பாராட்டவேண்டும். அதை விடுத்து பலமாதங்களாக டியூஷன் என்றும், புத்தங்கள், சஞ்சிகைகள், கருத்தரங்குகள் என்கிற பல்வேறு கோணத்தில் பணத்தை பிடிங்கிய நிலையில் மீண்டும் பல ஆயிரங்கள் மாணவர்களின் பெற்றோர்கள் மூலமாக கறக்கப்பட்டு விழா எடுப்பது சிலருக்கு சந்தோசமாக இருப்பினும் குறிப்பாக அரசாங்க உத்தியோகத்தர்களது பிள்ளைகளுக்கு எந்தவிதமான கொடுப்பனவுகளும் இன்மையானது அவர்களது உரிமை சாதாரணமான சம்பளத்திற்காக மறுக்கப்படுவது கவலைக்குறிய விடயமாகும்.
எனவே, பரீட்சைக்குப்பிந்திய காலகட்டத்தில் மாணவர்களினது மன அழுத்தங்கள் அவனது கல்விக்கு வேட்டுவைக்கின்ற நிலையிலிருந்து பிள்ளை விரும்பும் இடமாக பாடசாலையும், உன்னதமான கல்வியும் எதிர்கால நல்வாழ்வுக்கு அடித்தளமாக இப்பரீட்சையும் அமைய வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலை எப்போது உருவாகின்றதோ அப்போதுதான் இப்புலமைப் பரிசில் பரீட்சைக்கு உண்மையான பெறுமதி உண்டு என்பதை கற்றறிந்தோரும், பெற்றோரும் உணர்தல் வேண்டும். அத்துடன் இப்பரீட்சையின் ஆரம்பம் உயர்வகுப்பில் சித்தியடைவதற்கு எவ்விதமான தடையாகவும் இருக்கக்கூடாது என்பதைகூறி கற்பதற்கான தடைகள் அகற்றப்பட்டு சாதனை புரியும் ஆற்றலை வழங்கவேண்டிய கடப்பாடு பாடசாலைக்கு உண்டு என்பதை சமுதாயத்தின் முன் உணர்த்துதல் அவசியமாகும்.