Published On: Saturday, January 07, 2012
விரைவில் இந்திய அணியில் இடம்பெறுவேன் - யுவராஜ் சிங்

நுரையீரலில் கட்டி காரணமாக சிகிச்சை பெற்று வந்த யுவராஜ் சிங், தற்போது உடல்நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் இந்திய அணியில் இடம் பெற உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்கும் இடதுகை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். 2011 உலகக் கோப்பையை இந்தியா வென்ற போது, இவர் தொடர் நாயகனாக வலம் வந்தார். இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, யுவராஜ் சிங்கின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் யுவராஜ் சிங்கின் நுரையீரலில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த யுவராஜ் சிங் தற்போது குணமடைந்து வருகின்றார். டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் கடந்த மாதம் முழுவதும் யுவராஜ் சிங் வீ்ட்டில் ஓய்வெடுத்தார்.
கடந்த சில நாட்களாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுத்து வருகின்றார். நேற்று டெல்லிக்கு வந்திருந்த யுவராஜ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது யுவராஜ் சிங் கூறியதாவது; உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நான் முழுமையாக குணம் வருகின்றேன். உடல் தகுதி குறித்து எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றேன். இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து, விரைவில் முழுத்திறனுடன் இந்திய அணியில் இடம் பெறுவேன்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற போராடி வருகின்றது. சொந்த மண்ணில் விளையாடும் ஆஸ்திரேலியா, சிறப்பாக விளையாடி வருகின்றது. ஆஸ்திரேலியாவில் சச்சின், டிராவிட், லட்சுமன் உள்ளிட்ட அனுபவ வீரர்களால் கூட ரன் குவிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது, என்றார்.
யுவராஜ் சிங் குணமடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில் அவர் சேர்க்கப்பட்டு விளையாடுவார் என்று கருதப்படுகின்றது.