Published On: Saturday, January 07, 2012
பணத்திற்காக 2 மகன்களை அடமானம் வைத்த தந்தை

குடும்ப வறுமை காரணமாக ஒருவர் தனது 2 மகன்களையும் ரூ.40,000க்கு அடமானம் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பொம்மிடியைச் சேர்ந்தவர் தங்கராஜ். கூலித் தொழிலாளரான இவருக்கு விஜயா என்ற மனைவியும், மேகநாதன்(9), சரத்குமார் (8) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
குடும்ப வறுமையால் அவர் தனது 2 மகன்களையும் சேலம் மாவட்டம், சப்பாணிப்பட்டியைச் சேர்ந்த செங்கோடன் என்பவரிடம் ரூ.40,000க்கு அடமானம் வைத்தார். பணத்திற்கு பதிலாக செங்கோடனிடம் வேலை செய்ய 2 மகன்களும் ஒப்படைக்கப்பட்டனர். செங்கோடன் சொல்லும் பணிகளை செய்ய வேண்டும் என்றும், அடிக்கடி வந்து பார்ப்பதாகவும் கூறிய தங்கராஜ் தர்மபுரிக்கு சென்றுவிட்டார். கடந்த 18 மாதங்களுக்கு மேலாக செங்கோடனின் வீட்டில் 2 சிறுவர்களும் வேலை செய்து வந்தனர். காலையில் எழுந்து வீட்டு வேலைகளை முடித்து வி்ட்டு பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலையில் வீ்டு திரும்பியவுடன் மீண்டும் வேலை செய்வர்.
இந்த நிலையில் இது குறித்து சேலம் சைல்டு லைன் பணியாளர்களுக்கு தகவல் கிடைத்தது. செங்கோடனின் வீட்டிலும், சிறுவர்கள் படித்து வந்த பள்ளியிலும் சைல்டு லைன் பணியாளர்கள் விசாரித்தனர். அப்போது சிறுவர்கள் 2 பேரும் பணத்திற்காக அடமானம் வைக்கப்பட்ட தகவல் உண்மை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த நிர்மலா, லதா உள்ளிட்டோர் இது குறித்து நங்கவள்ளி போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து சைல்டு லைன் உறுப்பினர்களுடன் போலீசார் செங்கோடனின் வீட்டிற்கு சென்று சிறுவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை முள்ளுவாடி கேட்டை அடுத்த டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இது குறித்து மாவட்ட நன்னடத்தை நல அலுவலர் சிவகாந்தி கூறியதாவது; மீட்கப்பட்ட சரத்குமார், மேகநாதன் ஆகிய 2 சிறுவர்களையும் கொத்தடிமைகளாக நடத்திய செங்கோடனிடம் இருந்து பணம் வசூலித்து, மாணவர்களின் படிப்பிற்கு வழிவகை செய்யப்படும். தந்தையிடம் செல்ல விரும்பினால் அவர்களை அவரிடம் ஒப்படைப்போம் என்றார்.
இது குறித்து சிறுவர்கள் கூறியதாவது; எங்கள் தந்தை ரூ.40,000க்கு எங்களை அடமானம் வைத்துவிட்டார். ஆனால் அடிக்கடி வந்து பார்த்து செல்வார். அதிகாலையில் எழுந்து வீ்ட்டு வேலைகளையும், தோட்ட வேலைகளையும் செய்வோம். பின்னர் பள்ளிக்கு புறப்பட்டு சென்றுவிடுவோம். மாலையில் பள்ளியில் இருந்து வந்தவுடன் மீதமுள்ள பணிகளை செய்ய வேண்டும். ஆனால் செங்கோடனின் மகன்கள் மாலையில் விளையாட சென்றுவிடுவார்கள் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.