Published On: Monday, January 23, 2012
வடக்கில் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் மாணவர்களின் தொகையை அதிகரிக்கவும்
குற்றவியல் கருமங்களில் உதவியளித்தல் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் பாராளுமன்றில் கூறினார். வன்னி மாவட்டம் சார்பாக பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்தார் இவ்வுரையின்போது, கடந்த 30 வருட யுத்தத்தில் சமூக, பொருளாதார, கலாசார, கல்வி விடயங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசம் வன்னி மாவட்டமாகும். எனினும் கடந்த யுத்த காலத்தில் எமது அரசாங்கம் கல்வி விடயத்தில் மிகுந்த அக்கறையுடனும் பாரபட்டசமற்ற விதத்திலும் செயற்பட்டுவந்துள்ளது.
இதற்கு அங்கு பணியாற்றிய கல்விசார் உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. யுத்த சூழ்நிலையில் மாணவர்களின் எதிர்கால நலன்கருதி கற்பித்தல் செயற்பாடுகள், பரீட்சைகள் என்பன சிறந்த முறையில் இடம்பெற்று வந்துள்ளன. இந்த செயற்பாடுகளை கல்வி அமைச்சு சிறந்தமுறையில் நெறிப்படுத்தியது. இதற்கு நல்லதொரு உதாரணமாக தமிழிழ விடுதலைப்புலிகளின் பிள்ளைகள் ஏன் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிள்ளைகள் கூட சிறந்த பெறுபேறுகளை அரசாங்க பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றி பெற்ற வரலாறுகள் காணப்படுகின்றன.
அது மாத்திரமின்றி, யுத்தம் முடிவடைந்த பின்னர் மெனிக்பாம் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த எமது வன்னி மாவட்ட தமிழ் மாணவர்களின் கல்வி விடயத்தில் அக்கறைகொண்ட எமது அரசாங்கம் கொழும்பு மற்றும் பிறமாவட்ட ஆசிரியர்களை அங்கு அனுப்பி அகதி மாணவர்கள் கற்பதற்கு வழிவகுத்தது.
மேலும், தடுப்பு முகாமில் உள்ள இளைஞர் யுவதிகள் பரீட்சைகள் எழுதுவதற்கும் உயர் கல்வி கற்க, பல்கலைக்கழகம் தெரிவாவதற்கு எமது அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தவகையில் வன்னி மாவட்ட மக்கள் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் கல்வி அமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர், உரையாற்றும்போது, வன்னி மாவட்ட மாணவர்கள் சார்பில் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைப்பதாக கூறினார்.
கடந்த யுத்தகாலத்தில் வன்னி மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக சொந்த மாவட்டத்திலிருந்து விடுதலைப்புலிகளால் துரத்தப்பட்டனர். இவர்கள் சுமார் 22 வருடகாலம் பிறமாவட்டங்களில் வசித்து வந்தனர். இக்காலப்பகுதியில் சொந்த மாவட்டத்தின் வெட்டுப் புள்ளிகளுக்கமைய அவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியாத துன்ப நிலை ஏற்பட்டுள்ளது.
வருடத்துக்கு மாவட்டத்துக்கு 2 வைத்தியர், 2 பொறியியலாளர் என்று வைத்துக் கொண்டால் 22 வருடத்தில் 3 மாவட்டம் சார்பாகவும் 66 வைத்தியர்களையும், 66 பொறியியலாளர்களையும் வன்னிமாவட்ட முஸ்லிம்கள் இழந்துள்ளனர். அதற்கான காப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடு இந்த அரசாங்கத்துக்குள்ளது. மேலும் யுத்த காலத்தில் அச்சத்தின் காரணமாக வெளிமாவட்டங்களிற்கு அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள மாணவர்களும் தங்களது சொந்த மாவட்டம் சார்பாக பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாக முடியாத சந்தர்ப்பங்களும் உண்டு.
மேலும், சுமார் 25 வருடங்களுக்கு முன்புள்ள சனத்தொகை அடிப்படையிலே இன்று வரை வன்னி மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். உதாரணமாக மன்னார் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் வருடம் ஒன்றுக்கு 5 வைத்தியர்களும் 5 பொறியியலாளர்களுமே பல்கலைக்கழக ஒதுக்கீட்டின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். இது இப்போதைய சனத்தொகையோடும் வன்னி மாவட்டத்தின் தேவைப்பாட்டைப் பொறுத்துளவிலும் மிகவும் குறைவாகவுள்ளது.
இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது வன்னி மாவட்ட மக்களின் எண்ணங்களில் எமது மாவட்டத்தைச் சேர்ந்த பிள்ளைகள் வைத்திர்களாகவும், மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆசையோடும் ஆர்வத்தோடும் உள்ளனர். எனவே, தற்போதைக்கு வைத்தியதுறைக்கும் பொறியியல் துறைக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்குத் தெரிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துத் தருமாறு வன்னி மாவட்ட மாணவர்கள், மக்கள் சார்பாக உயர்கல்வி அமைச்சருக்கு தயவான வேண்டுகோளை விடுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் தெரிவித்தார்.