Published On: Tuesday, January 31, 2012
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் LTTE அங்கத்தவர்கள்-ஜனாதிபதி

LTTE அங்கத்தவர்களாக இருந்த பலர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் LTTE ஐ பிரதிநிதித்துவப் படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள்.
அவர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப்பதுமேயாகும். அதற்கு நானும் என்னுடைய அரசாங்கமும் ஒரு போதுமே இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப்பிரிவு பொறுப்பாளர்களை சந்தித்தபோது கூறினார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதனையும் எதிர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஒவ்வொரு சந்திப்பிலும் ஏதாவது ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்து, பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிச் செல்கின்றது. அவர்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகித்து, தங்கள் யோசனைகளை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்த மற்ற அங்கத்தவர்களின் ஆதரவை திரட்டுவதுதான் நல்ல யோசனை என்று ஜனாதிபதி கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும், LTTE ஐப் போன்று பேச்சுவார்த்தைகள் மேசையில் இருந்து அடிக்கடி தன்னிச்சையாக வெளியேறிவிடுவதுண்டு. இந்தத் தடவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிய போதும், நாம் எமது நல்லெண்ணத்தை காட்டும் முகமாக மீண்டும் பேச்சுவார்த் தைக்கு அழைத்தோம் என்று ஜனாதிபதி தெரிவித்தபோது குறுக்கீடு செய்த ஒரு பத்திரிகை ஆசிரியர், அப்படியானால் நீங்கள் ஏன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அவர்களை எப்படியாவது பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தங்கள் பிரதிநிதிகளை முன்மொழியச் செய்வதற்கு இணங்க வைப்பதற்காகவே இந்த பேச்சுவார்த்தைகளை நடத்துகிறோம் என்றார்.
செனட் சபை பற்றி இப்போது புதிதாக ஒரு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறதென்று ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்ட போது, இது புதிய யோசனை அல்ல. இதுபற்றி முன்னரும் நாங்கள் பேசியிருக்கிறோம். என்றாலும் எல்லா விடயங்களிலும் இறுதித் தீர்வை எடுக்கும் அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவிடமே இருக்கின்றது. பாராளுமன்ற தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்தால் செனட்சபை ஒன்றை ஏற்படுத்துவது சாத்தியமாகும் என்று ஜனாதிபதி கூறினார்.