Published On: Friday, January 06, 2012
விக்ரமின் கரிகாலன் படத்துக்கு எதிராக வழக்கு

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் 'கரிகாலன் என்ற படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. கரிகாலன் என்ற தலைப்பில் சினிமா எடுக்க தடை கேட்டு சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை போரூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் சென்னை 15ஆவது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நான் பிரியமுடன் பிரிவோம் என்ற ஆவணப் படம், டி.வி. தொடர்கள் ஆகியவற்றுக்கு இசையமைத்துள்ளேன்.
நாட்டிலேயே முதல் அணையை சோழ சக்கரவர்த்தி கரிகாலன் கட்டியுள்ளார். அவரது வரலாற்றை படித்து, அவர் மீது மிகுந்த பற்று கொண்டேன். ஆனால் வரலாற்று புத்தகத்தில் கரிகாலனை பற்றி விரிவான தகவல் இல்லை. இதையடுத்து கரிகாலன் வரலாற்றின் சாராம்சத்தை வைத்து கதை ஒன்றை எழுதினேன். இந்த கதைக்கு கரிகாலன் என்ற தலைப்பை வைத்துள்ளேன்.
`கரிகாலன் என்ற கதையின் தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996ஆம் ஆண்டு பதிவு செய்தேன். அந்த பெயர் பதிவை புதுப்பிக்க பல முயற்சிகள் எடுத்தும் முடியவில்லை. இந்நிலையில் கரிகாலன் என்ற பெயரில் நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தை சில்வர் லைன் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. கண்ணன் என்பவர் இயக்குகிறார். கரிகாலன் என்ற பெயரில் இவர்கள் படம் தயாரித்து வெளியிட்டால், எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். எனது எதிர்கால திரையுலக வாழ்வும் பாதிக்கும். எனவே கரிகாலன் என்ற பெயரில் படத்தை தயாரிக்க தடை விதிக்க வேண்டும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி விஜயகாந்த் விசாரித்தார். இந்த மனுவுக்கான பதில்மனுவை ஜனவரி 12ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யும்படி நடிகர் விக்ரம், இயக்குநர் கண்ணன், சில்வர் லைன் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது.