Published On: Monday, January 30, 2012
அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் SDC அமைக்கப்படாமல் இழுத்தடிப்பு

(நமது துருவம் செய்தியாளர்)
அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்திலுள்ள பல பாடசாலைகளில் பாடசாலை அபிவிருத்தி சபைகள் நீண்டகாலமாக தெரிவு செய்யப்படாது காணப்படுகின்றன. இதனை கண்டறிந்து உடனடியாக பாடசாலை அபிவிருத்தி சபைகளைத் தெரிவு செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பாடசாலைகளுக்கான அபிவிருத்தி சங்கம் என்பதற்குப் பதிலாக SDC எனும் பெயரில் புதிதாக அமைக்கப்பட வேண்டும் என சுற்றுநிருபங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சில அதிபர்கள் தங்களின் நலனைக் கருதிற்கொண்டு, நீண்டகாலமாக புதிய தெரிவினை நடாத்தாது காலத்தை இழுத்தடித்துக் கொண்டு வருகின்றனர். அதேவேளை சில பாடசாலைகளின் அபிவிருத்தி சங்கங்கள் காலாவதியான நிலையிலும் தொடர்ந்தும் அவர்களைக் கொண்டு இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஓராண்டு அல்லது 18 மாதங்களுக்குள் பாடசாலைகளின் அபிவிருத்தி சபைகளைத் தெரிவு செய்ய வேண்டும் என்று கூறிய போதிலும், இந்நிலை தொடர்வதாகவும் கூறப்படுகின்றது. பாடசாலையின் அபிவிருத்திக்கு சமுகத்தின் பங்களிப்பு அவசியம் என்பதனைக் கருத்திற்கொண்டு இலங்கையின் சகல பாடசாலைகளுக்கும் அபிவிருத்திச் சபைகள் உருவாக்கப்பட்டுள்ன. அதன் அடிப்படையில் பிரதேசத்திலுள்ள அனைவருக்கும் பாடசாலையின் அபிவிருத்தியில் சந்தர்ப்பத்தை வழங்கும் பொருட்டே காலத்திற்குக்காலம் புதியதாக நிருவாகிகளை தெரிவு செய்யும் நடைமுறைகள் இருந்தும் சிலர் நீண்டகாலமாக பாடசாலையின் அபிவிருத்திச் சபையில் (SDC) அங்கத்துவம் வகிக்து வருகின்றனர்.
இதனை தவிர்க்கும் முகமாக இப்பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளில் இதுவரை அமைக்கப்படாதுள்ள புதிய (SDC) களை தெரிவு செய்யும் நடைமுறைகளை உடன் செயற்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் ஆவணம் செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.