Published On: Thursday, January 12, 2012
‘திரிபோஷா’ வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி - சுகாதார அமைச்சர்

‘திரிபோஷா’ சத்துணவு இவ்வருடத்தின் பிற்பகுதி முதல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார். சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இச்செய்தியாளர் மாநாட்டின்போது அமைச்சர் மேலும் கூறுகையில், திரிபோஷா சத்துணவு உற்பத்தி செய்யும் நிறுவனம் தனியாருக்குச் சொந்தமானதாகவே இருந்தது. அதனை நாம் இப்போது பொறுப்பெடுத்துள்ளோம். இந்நிறுவனத்தை அரசாங்கம் பொறுப் பெடுக்கும் போது அதன் திரிபோஷா உற்பத்தி 65 சதவீதமாகவே காணப்பட்டது. அது இப்போது 94 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கின்றது.
என்றாலும் இவ்வருடத்தின் நடுப்பகுதியாகும் போது இந்நாட்டுக்குத் தேவையான 100 சத வீத திரிபோஷா சத்துணவும் இங்கேயே உற்பத்தி செய்யப்படும். இதன் பின்னர் மேலதிக உற்பத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். எமது திரிபோஷா சத்துணவுக்கு வெளிநாடுகளில் நல்ல கேள்வி நிலவுகின்றது. திரிபோஷா சத்துணவுக்குச் சோளமே பிரதானமாக சேர்க்கப்படுகின்றது. இது எமது விவசாயிகளின் பொருளாதாரத்தில் பெரிதும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் என்றார்.