Published On: Saturday, January 07, 2012
இந்த வருடத்தில் மின்சார சபை ஊழியர்கள் சகலருக்கும் சம்பள உயர்வு

சகல மின்சார சபை ஊழியர்களுக்கும் இந்த வருடத்தில் நியாயமான சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார். 30 வருடங்கள் சேவையாற்றிய மின்சார சபை ஊழியர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று பி.எம்.ஐ.சி.எச்.இல் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, சுமார் 15 ஆயிரமாக உள்ள மின்சார சபை ஊழியர்களுக்கு 3 வருடத்துக்கு ஒரு தடவை சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.
இதன்படி இந்த வருடம் சகல ஊழியர்களுக்கும் அவர்களின் தொழில் கெளரவம் பாதுகாக்கப்படும் வகையில் நியாயமான சம்பள உயர்வு வழங்கப்படும். சகலருக்கும் மின்சாரம் வழங்கும் பாரிய சவால் எம்முன் உள்ளது. 1960 ல் 4 வீதமானவர்களுக்கே மின்சார வசதி அளிக்கப்பட்டிருந்தது. இன்று 92 வீதமானவர்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான் போன்ற நாடுகளில் இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. பல்வேறு நெருக்கடிகள் உள்ள போதும் நாம் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கி வருகிறோம் என்றார்.