Published On: Saturday, January 07, 2012
தமிழகத்திலிருந்து திரும்பும் இலங்கை அகதிகளுக்கு இலவச கடவுச்சீட்டு
தமிழ் நாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இலவசமாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தமிழ் நாட்டில் அகதிமுகாம்களில், உறவினர் வீடுகளிலுமாக சுமார் 90 ஆயிரம் இலங்கை தமிழ் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் நாடு திரும்புவதற்காக கடவுச்சீட்டை பெறுவதற்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தமிழ் நாட்டின் சென்னையிலுள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தில் இலங்கைக் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு இந்திய நாணயப்படி 4 ஆயிரத்து 400 ரூபாவைக் கட்ட ணமாக செலுத்த வேண் டும். இது இலங்கை நாணயப்படி சுமார் 10 ஆயிரம் ரூபாவாகும்.
குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் பிரகாரம் இக்கட்டணத்தை கட்டாயமாக செலுத்த வேண்டும். எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கு அமைய அவர்களுக்கு இந்த இலவச கடவுச்சீட்டுகள் பெற்றுக்கொடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, 2007 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பு பவர்களை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு நாடு திரும்புபவர்களுக்கு பிரயாணப் பத்திரம் மற்றும் பயணச்சீட்டு என்பவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு யூ. என். எச். சி. ஆர். உதவிகளை வழங்கிவருகிறது.
நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதுடன், அரசாங்கத்தால் நிவாரணங்களும் வழங்கப்படுகின்றன. சொந்த இடங்களில் மீள்குடியமர்வதற்கான தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்ட உதவிகள் மாவட்ட செயலகத்தினால் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. நாடு திரும்பி மீள்குடியமர்த் தப்பட்டவர்களுக்குத் தொடர்ச்சியான உதவிகளையும் மீள்குடியேற்ற அமைச்சு வழங்கிவருகின்றது.
தமிழகத்திலிருந்து இலங்கை வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் முன்னர் விமானங்கள் மூலம் அழைத்துவரப்பட்டிருந்த நிலையில், அவர்களைக் கப்பல் மூலம் அழைத்து வருவதற்கு அமைச்சும், யு. என். எச். சி. ஆர் அமைப்பும் நடவடிக்கை எடுத்திருந்தது. தமிழகத்தில் நீண்டகாலமாகத் தங்கியிருந்த இவர்கள் நாடு திரும்பும்போது கூடுதல் எடைகொண்ட பொருட்களைத் தம்முடன் எடுத்துவருவதற்கு ஏதுவாகவே அவர்களைக் கப்பலில் அழைத்துவருவதற்கு மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.