Published On: Sunday, January 29, 2012
CNLF இன் கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள்

எஸ்.எல்.மன்சூர் (கல்விமானி)
கடந்த பல வருடங்களாக அட்டாளைச் சேனைப் பிரதேசம் அபிவிருத்தியிலும் கல்வியிலும் பின்தங்கியிருப்பதானது எதிர்காலத்தில் பாரியளவிலான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதனை நிவர்த்திக்க முதலில் கல்வியின்மீதான பற்றினையும், அதன் மீதுள்ள ஆர்வத்தையும் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்குடன் அண்மையில் அட்டாளைச்சேனை CNLF சமூக விவகார மன்றம் பிரதேசத்தின் பற்றாளர்களை ஒன்றுகூட்டி கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியது. அட்டாளைச்சேனை லொயிட் ஹோட்டலில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமைப்பின் தலைவர் எம்.எம். நௌஷாட் தலைமையில் நடைபெற்றது.
கலந்துரையாடலை ஆரம்பித்து மன்றத்தின் நோக்குகள், எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றை பிரஸ்தாபித்து தலைமையுரையாற்றிய அமைப்பின் தலைவர் எம்எம்.நௌஷாட் “எமது பிரதேசத்தின் கல்வியில் குறிப்பாக உயர் கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு சமூகத்தின் வீழ்ச்சிக்கு அத்திவாரமாக அமைந்துவிடும். எம்மிடம் உள்ள ஒரே சொத்து கல்விச் செல்வமாகும். அதள பாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் இக்கல்வியை நிமிர்த்துவதற்கு இங்குள்ள கல்விச் செல்வம் படைத்தவர்களது மேலான ஆலோசனைகளும், கருத்தாடல்களும் அவசியமாகும். அப்போதுதான் எமது மாணவச் செல்வங்கள் எதிர்காலத்தில் சிறப்பான கல்வியை மேற்கொள்வதற்கு உந்து சக்தியாக அமையும்” என்றார். உண்மையில் ஒரு சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு கல்வியே அடிப்படையாக அமைகின்றது என்பதை அன்றும், இன்றும் அரசும் காட்டிவரும் அக்கரையைக் கொண்டே புரிந்து கொள்ளலாம்.

இலவசக் கல்வி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் உயர்மட்டத்தினரிடம் மாத்திரம் இருந்த கல்வி பட்டி தொட்டி எங்கும் பரவி ஏழைகளின் குடிசைக்குள்ளும் கல்வித்தாகம் பரவி நின்றதனை யாரும் அறிவர். நாட்டின் அரசும் காலத்திற்கேற்றவாறு கல்வித் திட்டங்களை மாற்றியமைத்து மாணவர்களின் சீரான கல்வியோட்டத்தை தடையை ஏற்படுத்தாது பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. தற்போது ஆயிரம் பாடசாலைத் திட்டங்கள் எனும் அடிப்படையில் நாட்டிலுள்ள ஆயிரம் பாடசாலைகளை முழுமையாக அபிவிருத்தி செய்யும் திட்டங்களை இந்தாண்டிலிருந்து முன்னெடுத்துள்ள நிலையில் சிறிய பாடசாலைகளையும் பல்வேறு பெயர்களில் அபிவிருத்தி செய்து வருகின்றன.
அதேவேளை, பல பாடசாலைகளின் பௌதீக வளங்களை கல்வியமைச்சு, மாகாணக் கல்வியமைச்சு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றன. அமைச்சர்களும் தங்களுடைய நிதியினைக் கொண்டு பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதில் முன்னிலை வகிப்பதையும் காண்கிறோம். எல்லாச் செயற்றிட்டங்களும் சிறந்த மாணவச் சமுதாயத்தினரை வெளிக் கொணரவைப்பதும், சிறந்த நற்பிரஜையை தோற்றுவித்து சமூகத்தின் தலைசிறந்த சிற்பிகளையும், தலைவர்களையும் உருவாக்கி நவீன உலகின் ஆக்கத்திற்கு உந்துசக்தியாக இன்றைய இளைஞர்களை உருவாக்குவதேயாகும்.

ஆனால் இவற்றிக்கு விதிவிலக்காக சில பிரதேசங்கள் கல்வியில் விழிப்புணர்வற்று இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு எனலாம். அரசியல் காரணிகள் சரியாக ஊடுருவாமை முக்கியமாகும். இன்றைய காலங்களில் சாதகமான அரசியல் பின்னணி அமைகின்றபோது சரியான முறையில் திட்டமிட்டு பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை மேற்கொள்ள முடியும். அடுத்ததாக பாடசாலைகளின் அதிபர்கள் முறையான திட்டமிடல்களும் தமது கல்விமேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்கு அங்குள்ள ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர் மற்றும் ஊக்கக்குழுக்கள், பெற்றோர்கள், கற்கின்ற மாணவர்கள் அனைவரும் ஒரேபாதையை நோக்கிய பயனத்தில் பயணிக்க வேண்டும்.
இது முறை தவறி ஆளுக்கொரு பக்கம் செல்கையில் உரிய குறிக்கோளை அடைவதில் பின்னிலையே காணப்படும். இதனை நன்குணர்ந்து கொண்டதன் காரணமாக அனைவரையும் ஒன்றுசேர்த்து குறித்த இலக்கினை அடையவைப்பதில் அட்டாளைச்சேனை CNLF சமூக விவகார மன்றம் தனது பங்களிப்பை மேற்கொண்டிருப்பது அட்டாளைச்சேனையின் கல்விவரலாற்றில் போற்றத்தக்கதான சகுணத்தை ஏற்படுத்தியுள்ளதென குறிப்பிடலாம்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கல்விக் கல்லூரி, தென்கிழக்கு பல்கலைக்கழம், தொழில் நுட்பக் கல்லூரி, கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி போன்ற கல்வி பீடங்கள் அமையப்பெற்றுள்ளதுடன், இப்பிராந்தியத்தில் நூற்றாண்டைக் கடந்து சாதனை படைத்த சாதானா பாடசாலை என புகழ்பெற்ற அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையும் அமைந்திருக்கின்றன. இப்பாடசாலையில் கற்றறிந்த பலர் நீதவான்களாகவும், சட்டத்தரணிகள், கணக்காய்வாளர்கள், டாக்டர்கள், பொறியியலாளர்கள்,பிரதேச செயலாளர்கள் போன்ற பலகல்விமான் களையும், துறைசார்ந்த மாமனிதர்களையும் உருவாக்கி இன்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புகழ்பரப்பி வருகின்றனர்.

இவ்வாறான வெளியீடுகள் அண்மைக்காலமாக குறைவடைந்து கொண்டு வருவதை உணர்ந்து கொண்ட இந்த அமைப்பினர் இதன் பின்னணியில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்கும் வகையில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கதான நடவடிக்கை என கருத்தாடலில் கலந்து கொண்ட மட்டக்களப்பு நீதவான் அல்ஹாஜ் எம்.என்.எம். அப்துல்லா தெரிவித்தார். சிரேஷ்ட சட்டத்தரணியான அல்ஹாஜ். எஸ்.எம்.ஏ. கபூர் தெரவிக்கையில் இதனை முன்னெடுத்துச் செல்வதில் தடையாக இருக்கின்ற காரணிகளை இனங்கண்டு தீர்வை மேற்கொள்வதன் அவசியத்தை விரிவாக தெரிவித்தார்.
மேலும், அங்கு கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் பலரும் தங்களுக்கிடையிலான வேற்றுமைகளை மறந்து இப்பிராந்தியத்தின் கல்விமேம்பாட்டுக்கான தத்துவார்த்ததும், நிலைத்து நிற்பதற்குமான பலதரப்பட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டு எதிர்காலத்தில் இப்பிராந்தியத்தின் கல்வி மேம்பாட்டிற்கு பரிமாறினர். எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துப்பரிமாறல்கள் பிரதேச மட்டத்தில் ஏற்படுத்தப்படுவதற்கு இவ்வாறான இளைஞர்கள் ஒத்துழைக்கின்றபோது கிராமங்களிலிருந்தும் உயர்கல்வியில் சிறந்து மிளிரும் நற்பிரஜைமிக்க சமுதாயத்தைக் கட்டியெழுப்பி, நவீன இலங்கைக்கு முன்மாதிரியாக அமையும் செயற்பாடுகளை தொடர்ந்து செல்வதற்கு பெரியவர்களும் உந்து சக்தியாக அமைய வேண்டும் என்பதே நமது பார்வையாகும்.