Published On: Monday, February 27, 2012
இங்கிலாந்து 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது இருபது ஓவர் ஆட்டத்தில் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
துபாயில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஃபேர்ஸ்டோவ் 46 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்களும், கீஸ்வெட்டர் 24 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் உமர் குல் 2 விக்கெட் எடுத்தார்.
பின்னர் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 18.2 ஓவர்களில் 112 ஓட்டங்களுக்கு சுருண்டது. அந்த அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்வரிசையில் அப்ரிதி 25 ஓட்டங்களும், ஹாமத் ஆஸம் 21 ஓட்டங்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஸ்டீவன் பின் 3 விக்கெட் எடுத்தார். ஃபேர்ஸ்டோவ் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளன.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.


