Published On: Wednesday, February 22, 2012
அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரபு மொழியில் திருக்குறள்

(இந்தியாவிலிருந்து சாஹுல்)
தமிழில் உள்ள சிறந்த படைப்புகளை உலக மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகளை தமிழ் வளர்ச்சித்துறை தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக பாரதியார், பாரதிதாசன் படைப்புகள் மற்றும் திருக்குறளை அரபு மொழியில் மொழிபெயர்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தப் பணிகள் முடிவடையும் என்று உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், பாரதியார், பாரதிதாசன் படைப்புகள் மற்றும் திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்ப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. சீன மொழி அறிஞர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மொழி பெயர்ப்புக்கு தேர்வு செய்யப்படும் அறிஞர்களை அழைத்து வருவது, தங்க வைப்பது, ஊதியம் கொடுப்பது என பல்வேறு செலவுகளையும் மனதிற்கொண்டு, 3 கோடி இந்திய ரூபா செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இப்பணியை இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ளதாக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.